

பிடித்த உணவை சாப்பிட மக்களுக்கு உரிமை உள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் கூறினார்.
தேமுதிக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு பேசியதாவது:
அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கு. இன்று நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. நான் சும்மா இருக்கிறேன் என நினைக்க வேண்டாம். ஆட்டிறைச்சி சாப்பிடலாம். மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்பது என்ன சட்டம். இது கொடுமையா இருக்கு. ஆடு, கோழி அனைத்துக்கும் தடை விதிக்க வேண்டியதுதானே. அவரவருக்குப் பிடித்த உணவை சாப்பிட உரிமை உள்ளது. நான் எல்லோரையும் அரவணைத்துச் செல்பவன். சசிகலா பொதுச்செயலாளர் ஆவதற்கு ஓ.பன்னீர்செல்வம்தான் முதலில் ஆதரவு தெரிவித்தார். அவர்தான் இப்போது தர்மயுத்தம் நடத்துகிறார். தற்போதைய நிலைமைகளை எல்லாம் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். விஜயகாந்த் வருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தேமுதிக தலைமைக் கழக செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் இளங்கோவன், துணைச் செயலாளர் உமாநாத், இளைஞர் அணித் தலைவர் எல்.கே.சுதீஷ், தமிழக காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் எஸ்.எம்.இதயதுல்லா, அனைத்து இஸ்லாமியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்போலோ அனிபா மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.