Published : 24 Mar 2014 03:54 PM
Last Updated : 24 Mar 2014 03:54 PM

கோவை சிறுவன், சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு உறுதி: அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கோவையில் பள்ளிச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அவளையும் அவளது தம்பியையும் கொடூரமாக கொலை செய்த வழக்கில் மனோகரன் என்பவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.

கோயம்புத்தூரில் ஜவுளிக்கடை அதிபர் ஒருவரின் 10 வயது மகள், 7 வயது மகன் ஆகியோர் கடந்த 2010 அக்டோபர் 29-ம் தேதி காலை பள்ளிக்கு சென்றபோது திடீரென காணாமல் போயினர்.

கடத்திக் கொலை

பின்னர் சிறுமியும் சிறுவனும் கோவை புறநகர் பகுதியில் கால்வாயில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. அவர்களை கோவையைச் சேர்ந்த டிரைவர் மோகனகிருஷ்ணன் என்பவர் கடத்திச் சென்றுள்ளார். பின்னர் தனது நண்பர் மனோகரனுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு சிறுமியையும் அவளது தம்பியையும் கால்வாயில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.

போலீஸ் என்கவுன்ட்டர்

இதையடுத்து, வேன் டிரைவர் மோகனகிருஷ்ணன், மனோகரன் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மோகனகிருஷ்ணன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின், மனோகரன் மீதான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் மனோகரனுக்கு மரண தண்டனை விதித்து 2012 நவம்பர் 1-ம் தேதி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனோகரன் மேல்முறையீடு செய்தார்.

தண்டனை உறுதி

மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் மனோகரனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தனர். தீர்ப்பு விவரம் வருமாறு:

சிறுவர்களை மோகன கிருஷ்ணன்தான் கடத்தியுள்ளார். அதன்பிறகு மோகனகிருஷ்ணன், மனோகரன் இருவரும் கூட்டாக சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும், பின்னர் சிறுவர்கள் இருவரையும் கொலை செய்ததும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் கைகளை பின்புறமாகக் கயிற்றால் கட்டிவிட்டு, அவள் கதறி அழுத நிலையில் இருவரும் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின்னர் சாணிப் பவுடரை பாலில் கலந்து சிறுவர்கள் 2 பேருக்கும் கொடுத்து, கோவை மாநகரின் புறநகரில் உள்ள கால்வாய் தண்ணீரில் தள்ளி கொலை செய்துள்ளனர்.

கொடூர குற்றம்

விசாரணையின்போது குற்றத் துக்கான முழு பொறுப் பையும் மோகனகிருஷ்ணன் மீது சுமத்திய மனோகரன், தன் மீதான குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ளார். நடந்த சம்பவத்துக்கான சிறு வருத்தத்தைக்கூட அவரிடம் காண முடியவில்லை. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, கொடூர குற்றம் புரிந்த மனோகரனுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்கிறோம். மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

நீதிபதிகள் விளக்கம்:

கோவை சிறுமி, சிறுவன் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றவாளிக்கான மரண தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், தீர்ப்பில் எந்த இடத்திலும் அந்த சிறுவர்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. அவர்களின் பெயர்கள் X மற்றும் Y என்றே குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெயர்களை வெளிப்படுத்தக் கூடாது என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளிப்படுத்தாமல் X மற்றும் Y என்று குறிப்பிட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x