நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான மனு: வீடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்க ஸ்டாலின் தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான மனு: வீடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்க ஸ்டாலின் தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி திமுக செயல்தலைவர் ஸ்டாலின் செய்திருந்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் இம்மாதம் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ஸ்டாலின் தன் மனுவில், கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அவைத்தலைவரின் அறிவிப்பு சட்ட விரோதமானது; நம்பிக்கை தீர்மானத்தின் மீதான அவைத்தலைவரின் முடிவு செல்லாது. ஆளுநரின் செயலர், தலைமைச் செயலர், தேர்தல் ஆணைய அதிகாரி ஆகியோர் மேற்பார்வையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

விசாரணைக்கான வழக்குகள் பட்டியலில், நேற்று இடம் பெறவில்லை. இதையடுத்து, தற்காலிக தலைமை நீதிபதி ரமேஷ், நீதிபதி மகாதேவன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் திமுக ஏன் இந்த வழக்கைத் தொடர்ந்தது என்று ஆச்சரியமாகக் கேட்டனர். அதாவது பிரச்சினை முதல்வருக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்குமானது எனும்போது திமுக இதில் சர்ச்சையைக் கிளப்ப வேண்டிய தேவை என்ன என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு திமுக தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஷண்முகசுந்தரம், “மனுதாரர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் கூட, இவரை போர் நினைவுச்சின்னம் அருகே நிறுத்தினர், அங்கிருந்து சட்டப்பேரவைக்கு இவர் நடந்தே வர வேண்டியிருந்தது. மனுதாரர் உட்பட அனைத்து திமுகவினரையும் வலுக்கட்டாயமாக அவையிலிருந்து சட்ட விரோதமாக வெளியேற்றினர். அதாவது ரகசிய வாக்கெடுப்புக் கோரியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்றார்.

சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, கூறும்போது, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் காவல்துறை பாதுகாப்புடன் சட்டப்பேரவைக்கு அழைத்து வரப்பட்டனர், இது அவர்கள் சட்ட விரோதமாக அடைக்கப்பட்டிருப்பதை எடுத்துரைக்கிறது மேலும் எம்.எல்.ஏ.க்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்ததன் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எஃப்.ஐ.ஆர். நிலுவையில் உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

இதில் திருப்தியடையாத நீதிபதிகள் அமர்வு, குற்றச்சாட்டுகளுக்கு வீடியோ ஆதாரம் ஏதும் உள்ளதா என்று கேட்டனர், இதற்கு பதில் அளித்த ஷண்முகசுந்தரம் ஒரு குறிப்பிட்ட தனியார் சேனல் மட்டுமே சட்டப்பேரவை நிகழ்வுகளை படம்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே சட்டப்பேரவை செயலர் இந்த வீடியோ பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வழிகாட்டுதல் வேண்டும் என்று கோரினார்.

எந்த ஒரு வழிகாட்டு நெறியும் அளிக்க மறுத்த நீதிபதிகள் வீடியோ ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் என்று கூறி பிப்ரவரி 27-ம் தேதிக்கு இது தொடர்பான அனைத்து பொதுநல மனுகள் மீதான விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in