நூறு நாள் வேலை திட்டம் ரத்து செய்யப்படுகிறதா? - காங்கிரஸ் புகாருக்கு தமிழிசை பதில்

நூறு நாள் வேலை திட்டம் ரத்து செய்யப்படுகிறதா? - காங்கிரஸ் புகாருக்கு தமிழிசை பதில்
Updated on
1 min read

நூறு நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும் என்று காங்கிரஸார் கூறி வருவது வேடிக்கையானது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

நூறு நாள் வேலை திட்டத்தில் குளறுபடி நடப்பதாகக் கூறி பாஜக அரசை கண்டித்து நவம்பரில் போராட்டம் நடத்தப்போவதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதற்கு பதிலளித்து ‘தி இந்து’விடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

பாஜக அரசின் நல்ல திட்டங்களைக்கூட காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கட்சத்தீவை மீட்க வேண்டும், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் அதிகளவு தமிழகத்துக்கு தர வேண்டும் என்றெல்லாம் தமிழக காங்கிரஸார் கேட்கின்றனர். பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது வாயை மூடிக்கொண்டு இருந்தவர்கள், தற்போது இதையெல்லாம் பேசுவது வேடிக்கையான ஒன்று.

நூறு நாள் வேலை திட்டம் முடங்கப்போகிறது என்று கூறி தமிழக காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப் போவதாக ஞானதேசிகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சாமான்ய மனிதர்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் மோடி தலைமையிலான அரசு எடுக்காது. நூறு நாள் வேலை திட்டத்தைப் பொறுத்தவரை உள்ளூர் நிர்வாகங்கள்தான் குளறுபடிகளை செய்கின்றன. காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் நூறு நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்தாததைக் கண்டித்து பாஜக சார்பில் கடந்த மாதம் போராட்டம் நடத்தப்பட்டது.

இத்திட்டத்தில் உள்ள குளறுபடிகளை முறைப்படுத்தும் வேலையைத்தான் பாஜக அரசு செய்துவருகிறது. அதற்குள் நூறு நாள் வேலை திட்டத்தை நிறுத்தப் போவதாக கூறுவது வேடிக்கையானது. காங்கிரஸை நம்ப மக்கள் தயாராக இல்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in