திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு ‘ஸ்பெஷல் கிளாஸ்’ அந்தஸ்து: பரிந்துரை செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு

திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு ‘ஸ்பெஷல் கிளாஸ்’ அந்தஸ்து: பரிந்துரை செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு
Updated on
1 min read

திண்டுக்கல் ரயில்நிலையத்துக்கு ‘ஸ்பெஷல் கிளாஸ்’ அந்தஸ்து கிடைக்க, மதுரை ரயில்வே கோட்டம், ரயில்வே அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் ரயில்நிலையம் கடந்த 1875-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், திண்டுக்கல் மலைக்கோட்டை முக்கிய ராணுவ கேந்திரமாகச் செயல்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து ராணுவ தளவாடப் பொருட்கள், ராணுவ வீரர்களை அழைத்து வரவும், வணிக ரீதியாக வியாபார பொருட்களை சென்னை, பெங்களூர் மார்க்கமாக பிற நகரங்களுக்கு கொண்டு செல்லவும், திண்டுக்கல் ரயில்நிலையம் தொடங்கப்பட்டது. தற்போது 140 ஆண்டுகளைக் கடந்தபின்னரும், திண்டுக்கல் ரயில்நிலையம் கம்பீரமாகக் காணப்படுகிறது. இந்த ரயில்நிலையம் வழியாக, தினசரி 64 பயணிகள், எக்ஸ்பிரஸ் ரயில்கள், 6 வாராந்திர சிறப்பு ரயில்கள், 10 சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சரக்கு ரயில்கள் மூலம் மாதம் 2 கோடி ரூபாயும், பயணிகள் ரயில் டிக்கெட் மூலம், மாதம் சராசரியாக 80 லட்சம் ரூபாய் வரையும் தெற்கு ரயில்வேக்கு வருவாய் கிடைக்கிறது.

ரயில்வே துறையை பொறுத்தவரையில் வருமானம், பயணிகள் வருகை மற்றும் ரயில்கள் வருகையை அடிப்படையாகக் கொண்டு ரயில்நிலைங்கள் ஸ்பெஷல் கிளாஸ், ‘ஏ’ கிளாஸ், ‘பி’ கிளாஸ், ‘சி’ கிளாஸ் மற்றும் மாடல் ரயில்நிலையம் என தரம் உயர்த்தப்படுகிறது. திண்டுக்கல் ரயில்நிலையம் ‘ஏ’ கிளாஸ் அந்தஸ்தில் செயல்படுகிறது. திண்டுக்கல் ரயில்நிலையம் வழியாக சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக கூடுதல் ரயில்கள் செல்கின்றன. இதன்மூலம், ரயில்வே நிர்வாகத்துக்கு வருவாயும் அதிகரித்துள்ளது. அதனால், திண்டுக்கல் ரயில்நிலையத்திற்கு ‘ஸ்பெஷல் கிளாஸ்’ அந்தஸ்து பெற மதுரை கோட்டம், விரைவில் தெற்கு ரயில்வே மூலம் மத்திய ரயில்வேக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் ரயில்நிலைய உயர் அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘வருவாய் அதிகரிக்கும்போது தானாகவே ரயில் நிலையங்கள், அடுத்தநிலைக்கு தரம் உயர்த்த பரிந்துரை செய்யப்படும். திண்டுக்கல் ரயில்நிலையம் ‘ஸ்பெஷல் கிளாஸ்’ அந்தஸ்தை பெறும் நிலையில்தான் உள்ளது. எந்த நேரத்திலும் தரம் உயர்த்த பரிந்துரை செய்யப்படலாம்.’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in