

காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததால் கர்நாடகம், ரூ.2,480 கோடி இழப்பீடு வழங்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இரு மாநிலங்களும் ஒரு வாரத்துக்குள் சாட்சிகளின் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 2000 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் 18-ம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது மறுஉத்தரவு வரும் வரை 2000 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால் அணைகளில் தண்ணீர் இல்லை என்று காரணம் காட்டி தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடகா மறுத்து வருகிறது.
இதற்கிடையே, கடந்த 2013-ல் தமிழக அரசு தாக்கல் செய்த ஒரு மனுவில், ‘கர்நாடக அரசு தொடர்ந்து காவிரி நீரை திறந்துவிடாததால், தமிழகத்தில் சம்பா, குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனர். நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடகம் அமல்படுத்தாததால் உணவு உற்பத்தி குறைந்துவிட்டது. எனவே, இதற்கான இழப்பீடாக கர்நாடக அரசு ரூ.2,480 கோடி வழங்க உத்தரவிட வேண்டும்’ கோரியிருந்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், “இரு மாநிலங்களும் இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளின் பட்டியலை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். சாட்சிகளின் பிரமாணப் பத்திரங்களை 4 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதற்கிடையே, காவிரி விவகாரம் தொடர்பான மூல வழக்கு, பிப்ரவரி 7-ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில் தினமும் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.