தமிழக பட்ஜெட் 2017 - 18: உள்ளாட்சித் தேர்தலுக்கு ரூ.174 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட் 2017 - 18:  உள்ளாட்சித் தேர்தலுக்கு ரூ.174 கோடி ஒதுக்கீடு
Updated on
2 min read

உள்ளாட்சித் தேர்தலுக்கு ரூ.174 கோடி ஒதுக்கீடு

உள்ளாட்சித் தேர்தலுக்காக ரூ.174 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: அரசியலில் பெண்கள் அதிகாரம் பெறும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளில், அவர்களுக்கான இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த செலவினங்களுக்காக 2017-18-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.174 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

இலவச சைக்கிள், நல திட்டங்களுக்கு ரூ.1,503 கோடி

பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் குழந்தைகளை ஊக்கப்படுத்தி இலவச மற்றும் கட்டாய கல்வி மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் தடைகளை நீக்க அரசு உறுதி பூண்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 4 சீருடை தொகுப்புகள், புத்தகப் பைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், நோட்டுகள், ஜியாமெட்ரிபாக்ஸ், சைக்கிள், பஸ் கட்டணச்சலுகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும். 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த திட்டங்களுக்காக ரூ.1,503 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. லேப்-டாப் (மடிக்கணினி) வழங்குவதற்கு ரூ.758 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை குழந்தைகள் கல்வி திட்டத்துக்கு ரூ.201 கோடி

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சமுதாயத்தில் பின்தங்கிய மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பயில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 3 லட்சத்து 28 ஆயிரத்து 910 குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர்.2016-17-ல் மட்டும் 97 ஆயிரத்து 606 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். 2017-18 பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்கு ரூ.201 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.352 கோடி

பள்ளிகளில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள், குடிநீர் வசதி, சுற்றுச்சுவர், சாய்வு தளங்கள், மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி கழிவறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த நிதி ஆண்டில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.441 கோடி ஒதுக்கப்பட்டது. பள்ளிகளில் உள்ள கழிவறைகளில் சுகாதாரத்தைப் பேணும் வகையில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ரூ.57 கோடியே 63 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கியிடமிருந்து பெறப்படும் கடனுதவியுடன் சேர்த்து பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2017-18-ம் ஆண்டில் ரூ.352 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

12,524 ஊராட்சிகளில் விளையாட்டு போட்டி நடத்த நிதி

விளையாட்டுத்திறனை மேம்படுத்த அரசு தொடர்ந்து சிறப்பு முயற்சிகளை எடுத்து வருகிறது. விளையாட்டு வீரர்கள் உடற்தகுதி மற்றும் அவர்களின் மனஉறுதியை மேம்படுத்தி திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் நீலகிரியில் ரூ.5 கோடி செலவில் மலை மேலிட விளையாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவதற்காக சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 2017-18-ம் ஆண்டில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் கிராம அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்த ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கென ரூ.165 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in