Published : 20 Feb 2016 06:50 PM
Last Updated : 20 Feb 2016 06:50 PM

மார்க்சிஸ்ட் எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியது மீன்பிடிப்பதை ஒழுங்குபடுத்தும் சட்டத் திருத்தம்

மார்க்சிஸ்ட் கட்சியின் எதிர்ப்புக்கு இடையே தமிழ்நாடு கடலில் மீன்பிடிப்பதை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத் திருத்தம் சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு கடலில் மீன்பிடிப்பதை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தத்தை மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் கொண்டுவந்தார். இதன் படி, மீன்பிடி படகுகளை மாநில கடற்கரை பகுதியில் இருந்து 5 கடல் மையில் தூரத்துக்கு மீன்பிடிக்க பயன்படுத்தக் கூடாது. தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு செல்லக் கூடாது. மீன்பிடி படகுக்குள் புகுந்து அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கான அனுமதி, மீன்பிடி தடைக்காலத்தில் மீன்பிடித்தால் பிடித்த மீன்களுக்கு அபராதம், எல்லை தாண்டி மீன்பிடித்தால் ஆயுட்கால தடை போன்றவை சட்டத்திருத்தத்தில் அடங்கும்.

இதற்கான சட்டம் இன்று சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் எஸ்.குணசேகரன் ஆகியோர் ஆய்வு செய்த பின் திருத்தும்படி கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், குரல் வாக்கெடுப்பினர் படி சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

இதே போல், மதிப்பு கூட்டு வரி சட்டத்திருத்தம், துறையின் அமைச்சர் எம்.சி.சம்பத்தால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

பேரவை நிகழ்ச்சி முடிவில், சட்டத்திருத்தங்கள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், ''கடைசி நாளில் இந்த சட்டத்திருத்தம் ஏன் நிறைவேற்றப்பட்டது என தெரியவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரத்தை இந்த சட்டத் திருத்தம் பாதிக்கும் என எடுத்து கூறப்பட்டபோதும், மீன்வளத்துறை அமைச்சர் பதில் அளிக்கும் முன்னரே, சட்டத் திருத்தம் நிறைவேற்றபப்ட்டுள்ளது. நிதிநிலை அறிக்கை தொடர்பான விளக்கங்கள் முழுமையாக ஏற்க கூடியதாக இல்லை'' என்றார்.

இதே போல், ஊராட்சி பதவிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு தொடர்பான சட்டத்திருத்தத்தை வரவேற்ற காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி, மீன்பிடித்தலை ஒழுங்குபடுத்தும் சட்டம் மீனவர்களுக்கு எதிரானதாக இருப்பதாக தெரிவித்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x