Published : 01 Sep 2016 08:15 AM
Last Updated : 01 Sep 2016 08:15 AM

பள்ளி மாணவர்களுக்கு தூய தமிழ் அகராதி வழங்கப்படும்

பள்ளி மாணவர்களுக்கு தூய தமிழ் அகராதிகள் வழங்கப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் கூறியதாவது:

தமிழில் ஒற்று, சந்தி, மயங்கொலி உள்ளிட்ட இலக்கணப் பிழைகள் ஏதுமின்றி கணினியில் எழுதவும், தவறுகளை தானே சுட்டிக்காட்டி திருத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள ரூ.300 மதிப்புள்ள ‘அம்மா மென்தமிழ் சொல்லாளர் மென்பொருள்’ முதல்கட்டமாக 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் நடத்தப்படும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது வழங்கப்படும் முதல் 2 பரிசுகளுடன் 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

1.5 லட்சம் நூல்களுடன் செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு நூலகம், ரூ.5 லட்சம் செலவில் சீரமைக்கப்படும். ‘தமிழ் இலக்கியம் தடம் பதித்த 116 ஆண்டுகள்’ என்ற தலைப்பின்கீழ் 1900 முதல் 2016 வரை வெளிவந்த இலக்கிய நூல்களின் விவர அட்டவணை தமிழ், ஆங்கில மொழிகளில் வெளியிடப்படும்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோறும் அயல்நாட்டு அறிஞர் ஒருவரை அழைத்து தமிழாய்வு அரங்கம் நடத்தப்படும். பள்ளி மாணவர்கள் மனதில் நல்ல தமிழ்ச் சொற்களை பதிய வைக்கவும், வழக்கிழந்து வரும் தமிழ்ச் சொற்களை பயன்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு தூய தமிழ் அகராதிகள் வழங்கப்படும்.

பழமையான மொழியான தமிழை காக்கும் நோக்கில், அன்றாடம் பயன்பாட்டுக்கு வரும் பிறமொழி சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை தரப்படுத்தி ஊடகங்கள், அறிவியலாளர்கள், மொழியியலாளர்களுக்கு வழங்கும் நோக்கில் அகரமுதலி இயக்ககத்தில் தமிழ் கலைக்கழகம் ஏற்படுத்தப்படும். தமிழ்ச் சொற்களின் சரியான வேர்ச் சொல் சுவடி வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x