Published : 28 Oct 2015 08:02 AM
Last Updated : 28 Oct 2015 08:02 AM

அரசு, அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் நவம்பர் முதல் ஆரம்பம்: நற்பண்புகள் குறித்து வாரத்தில் ஒருநாள் பாடம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் முதல் நீதி போதனை வகுப்பு நடத்தப்பட இருக்கிறது.

அவர்களுக்கு நற்பண்புகள் குறித்து பிரத்யேக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வாரத்தில் ஒருநாள் வகுப்பு எடுப்பார்கள்.

ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பள்ளி மாணவர்களுக்கு அன்றாட பாடங்களுடன் நீதி போதனை என்ற நல்லொழுக்க வகுப்பும் இருந்தது. வாரத்தில் ஒரு வகுப்பு இதற்காக ஒதுக்கப் பட்டிருக்கும். இதில் சிறிய கதைகள், அன்றாட நிகழ்வுகள் மூலமாக நல்ல பழக்க வழக்கங்கள், பெரியவர்களை மதித்தல், பிறருக்கு உதவி செய்வது, நேர்மை, நாட் டுப்பற்று முதலான நற்பண்புகள் குறித்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும். காலப்போக்கில் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு காணாமல் போனது.

இந்த நிலையில், பாடத்துடன் நற்பண்புகள் என்ற பெயரில் பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பை கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்தது. முதல்கட்ட மாக நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு இந்த சிறப்பு வகுப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான பாடங்களை ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆர்வமுள்ள ஆசிரியர்களை தேர்வு செய்து முதலில் மாநில அளவிலும், அதன்பிறகு மாவட்ட அளவிலும், பின்னர் வட்டார அளவிலும் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாநில அளவி லான 2 நாள் பயிற்சி சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று தொடங்கியது. ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் பயிற்சியை தொடங்கி வைத்தார். இணை இயக்குநர்கள் வி.பாலமுருகன் (பயிற்சி), பெ..குப்புசாமி (நிர்வாகம்), காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சிவகுமார் ஆகியோர் பயிற்சி திட்டத்தை எடுத்துரைத்தனர்.

சென்னையைச் சேர்ந்த தாயுள்ளம் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், கே.சித்ரா, பி.அபர்ணா, எஸ்.பாலாஜி, எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பாடத்துடன் நற்பண்பு களை சொல்லித்தருவது குறித்து ஆசிரியர் களுக்குப் பயிற்சி அளித்தனர். பயிற்சியின் போது ஆசிரியர்கள் அனைவரும் மாண வர்களாக மாறி ஆர்வத்தோடு கவனித்த னர். இப்பயிற்சி இன்று முடிவடைகிறது.

ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி குறித்து மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியதாவது:

பயிற்சி பெறும் ஆசிரியர்கள் மூலம் அடுத்த கட்டமாக மாவட்ட அளவிலும், அதன்பின் வட்டார அளவிலும் இதர ஆசிரியர்களுக்குப் பயிற்சி தரப்படும். ஆசிரியர்களுக்கான பயிற்சி நவம்பர் 15-ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு உடனடியாக நடுநிலைப் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு தொடங்கப்படும். வாரத்துக்கு ஒரு வகுப்பு வீதம் 20 விதமான நற்பண்பு கள் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர் கள் சொல்லிக்கொடுப்பார்கள். இந்த நல் லொழுக்கப் பயிற்சி மூலம் 9,598 நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 30 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெறுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உதவி பேராசிரியர் டி.பிரபாகர்:

ஆர்வமும், விருப்பமும் கொண்ட தமிழ், சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் பயிற்சிக்கு தேர்வுசெய் யப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக நடு நிலைப் பள்ளிகளுக்கும், 2-வது கட்டமாக உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளுக்கும் இந்த நற்பண்பு பயிற்சி திட்டம் விரிவுபடுத்தப்படும்.

ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் தாயுள்ளம் பவுண்டேஷன் ஒருங்கிணைப் பாளர் எஸ்.பாலாஜி:

பாடத்தில் வரும் விஷயங்களைக் கொண்டு நீதிக்கதைகள், நிஜ சம்பவங்கள், அன்றாட நிகழ்வுகள் மூலமாக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நற்பண்புகளை விளக்குவார்கள். உதா ரணத்துக்கு அசோகர் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டார் என்பதை வரலாறு பாடத்தில் படிப்பார்கள். இந்த விஷயத்தை எடுத்துச்சொல்லி மரக்கன்றுகள் நடுவதால் ஏற்படும் பயன்பாடுகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துச்சொல்வார்கள். பாடத்துடன் இணைந்து நற்பண்புகள் சொல்லிக்கொடுக்கப்படுவதால் மாணவர் களின் படிப்பு பாதிக்கப்படாது.

ஒருங்கிணைப்பாளர் கே.சித்ரா:

நற்பண்பு கள் மாணவர்களை உணர்வுப்பூர்வமாக நிச்சயம் தொடும். அவர்கள் கேள்விகள் கேட்கும் வகையில் வகுப்பு இருக்கும். தலைமைப் பண்பு என்று சொன்னால் அது நடைமுறை வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லப்படும். பாடத்திட்டத்துடன் இணைந்து நற்பண்புகள் கற்றுக் கொடுக்கப்படுவதால் படிப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

என்னென்ன நற்பண்புகள்?

6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதியோரிடம் அக்கறை காட்டுவது, கீழ்படிதல், நன்றியுணர்வு, நேரம் தவறாமை, கூட்டுமுயற்சி, நாட்டுப்பற்று, தேசிய ஒருமைப்பாடு உள்ளிட்ட 20 நற்பண்புகள் குறித்தும், 7-ம் வகுப்பு மாணவர் களுக்கு ஒழுக்கம், சமூக உணர்வு, இரக்கம், பணிவு-மரியாதை, மறப்பது- மன்னிப்பது, நேர்மை, சமாதானம் முதலான 20 நற்பண்புகள் குறித்தும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, பிறருக்கு உதவி செய்வது, விட்டுக்கொடுத்தல், அன்பு, சமூக நலன், பொறுமை, கூட்டு செயல்பாடு, தலைமைப்பண்பு, கடமையும் பொறுப்புணர்வும், முன்உதாரணம், குடும்ப நெறிமுறைகள், சமநோக்கு உள்ளிட்ட 20 நற்பண்புகள் குறித்தும் சொல்லித்தரப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x