

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டு உறுப்பினர் களுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 1,330 அமைவிடங்களில் 5 ஆயிரத்து 531 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 29 லட்சத்து 39 ஆயிரத்து 374 பெண்கள் உட்பட 58 லட்சத்து 50 ஆயிரத்து 379 பேர் வாக்களிக்க உள்ளனர்.
இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 3-ம் தேதி வரை (அக்டோபர் 2 நீங்கலாக), ஒவ்வொரு நாளும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மனுதாக்கல் செய்யலாம். அக்டோபர் 4-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 6-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். 19-ம் தேதி காலை 7 முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 26-ம் தேதி வார்டு உறுப்பினர்கள் பதவி பிரமாணம் நடைபெறும்.
இத்தேர்தலை நடத்துவதற்காக மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் 36 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வேட்புமனுக்களை பெறுதல், பரிசீலித்தல், வாக்குப் பதிவை நடத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்வர். தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனுக்களை அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.