Published : 05 Apr 2017 08:16 AM
Last Updated : 05 Apr 2017 08:16 AM

வாகன நிறுத்தம் இல்லாத 767 உணவகங்களை மூடும் உத்தரவு தளர்வு

வாகன நிறுத்த வசதி இல்லாத 767 உணவ கங்களை மூட வேண்டும் என்ற உத்தரவை தளர்த்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

சென்னை மாநகரில் ஏராளமான சாலை ஓர உணவகங்களில் வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லை. உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது கார்களை சாலையை மறித்து நிறுத்தி செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, வாகன நிறுத்தம் இல்லாத உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த லோகு என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘‘சென்னையில் வாகன நிறுத்தம் இல்லாத உணவகங்களை மூட கடந்த பிப்ரவரி 10-ம் தேதியன்று உத்தரவிட்டது.

சென்னை உணவகங்கள் சங்கத் தலைவர் எம்.ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சென்னை மாநகரில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 400 முதல் 500 சதுர அடியில் சிறு உணவகங்கள் இயங்கி வருகின்றன. உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து வாகன வசதியில்லாத 767 சிறு உணவகங்கள் இயங்க அதிகாரிகள் அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் உணவக உரிமையாளர்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். புதிதாக திறக்கப்படும் உணவகங்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். ஆகவே, வாகன நிறுத்துமிடம் இல்லாத உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது.

பின்னர் நீதிபதிகள், சென்னையில் வாகன நிறுத்த வசதி இல்லாத உணவகங்களை மூட வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தளர்த்தியும், உரிமம் புதுப்பிக்க மறுக்கப்பட்ட 767 உணவகங்களுக்கு மீண்டும் உரிமத்தை புதுப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும், பிரதான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x