விவசாயிகள் படுகொலைக்கு மத்தியப் பிரதேச முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்: திருமாவளவன்

விவசாயிகள் படுகொலைக்கு மத்தியப் பிரதேச முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்: திருமாவளவன்
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்தின் விவசாயிகள் படுகொலைக்குப் பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டுமென்றும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்திய மத்தியப் பிரதேச விவசாயிகள் மீது அங்கு ஆட்சிசெய்யும் பாஜக அரசின் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 6 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தப் பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் சிக்கலைத் தீர்ப்பதற்கான தேசியக் கொள்கை ஒன்றை உருவாக்கவேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்.

மத்தியப் பிரதேச மாநிலம் விவசாயத்தையே நம்பியுள்ள மாநிலங்களில் ஒன்று. அங்கு ஏற்பட்ட தொடர் வறட்சியால் விவசாயத் துறை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. விவசாயிகளின் தற்கொலை மிக அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் அது முன்னணியில் நிற்கிறது. கடந்த ஆண்டு மட்டும் அங்கு சுமார் 1500 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் அந்த மாநிலத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில்தான், வெங்காயத்திற்கு கிலோ ஒன்றுக்கு 8 ரூபாய் விலை நிர்ணயம் செய்யவேண்டும், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் விலைப் பொருட்களுக்கு அரசாங்கம் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கவேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து அங்கிருக்கும் விவசாயிகள் அறவழியில் போராட்டங்களை நடத்தினார்கள். அவர்கள்மீது பாஜக அரசின் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதோடு பலர் படுகாயம் அடைந்துள்ளனர். கொல்லப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 8 என அங்கிருக்கும் விவசாயச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் மட்டுமின்றி மோடி தலைமையிலான அரசு மத்தியில் பொறுப்பேற்றதிலிருந்து நாடெங்கும் விவசாயிகளின் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. அதற்குக் காரணம் விவசாயத் துறையைக் குறிவைத்து அதற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக மத்திய அரசு மேற்கொண்டுவரும் பொருளாதார நடவடிக்கைகளே ஆகும்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக எம்.எஸ்.சுவாமிநாதன் அளித்த பரிந்துரைகளை மோடி அரசாங்கம் நிறைவேற்ற மறுத்து வருகிறது. தமிழக விவசாயிகள் டெல்லிக்குச் சென்று போராடிய போதுக்கூட அவர்களது போராட்டத்தை மோடி அரசு கண்டுகொள்ளவில்லை.

மத்திய பிரதேசத்தின் விவசாயிகள் படுகொலைக்குப் பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும். மத்தியில் ஆளும் மோடி அரசு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேசியக் கொள்கை ஒன்றை உடனடியாக உருவாக்க வேண்டும்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in