

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்தும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தலைமையில் நாளை (இன்று) ஒன்றுகூடி விவாதிக்க இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பான விதிமீறல் வழக்கில் பண்ருட்டி நீதிமன்றத்தில் நேற்று ஆஜராக வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளைச் சம்பவங்களை பார்க்கும்போது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பது தெரிகிறது.
செங்கத்தில் ஆட்டோ டிரைவர் குடும்பத்தினரை தாக்கிய போலீஸாரை பணி நீக்கம் செய்ய வேண்டும். மாநிலத் தலைநகர் போதைப் பொருளின் புகலிடமாக மாறியுள்ளது. எனவே தமிழக அரசு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நீர்வளப் பிரச்சினைகளை கையாள, அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என்றார்.