Published : 19 Dec 2013 06:15 PM
Last Updated : 19 Dec 2013 06:15 PM

பிரதமர் பதவிக்கு தகுதியானவர் ஜெயலலிதா மட்டுமே: அதிமுக

தொன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழகத்திலிருந்து ஒருவர் இந்தியாவுக்கு தலைமை ஏற்கும் காலம் கனிந்திருக்கிறது. இந்தியாவின் ஒளிமயமான எதிர்கால வாழ்வுக்கு ஏற்ற ஆட்சியை வழங்கும் திறமையுடைய ஒரே நம்பிக்கை நட்சத்திரம் தமிழக முதல்வர் ஜெயலலிதா மட்டுமே என்று அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில், பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் சென்னை அருகே வானகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழா நடந்த மண்டபத்துக்கு முதல்வர் ஜெயலலிதா 2.55 மணிக்கு வந்தார். 3 மணிக்கு செயற்குழுக் கூட்டம் தொடங்கியது. ஐந்து நிமிடங்களில் செயற்குழுக் கூட்டம் முடிந்தது.

பின்னர் அடுத்த அரங்கத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:

அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதாவின் நீண்ட நெடிய அனுபவம் காரணமாக, தமிழகம் பல்வேறு துறைகளில் எடுத்துக்காட்டான மாநிலமாக விளங்குகிறது. தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

இலங்கைத் தமிழர்களின் சம உரிமைக்காகவும் நீதிக்காகவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இந்திய நாட்டின் நலனுக்கு விரோதமான இந்திய அமெரிக்க எரிசக்தி ஒப்பந்தம், சீனாவின் ஊடுருவல், தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அராஜகச் செயல்கள் ஆகியவற்றை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா.

அவர் இந்திய கலாச்சாரத்தின் பன்முகத் தன்மையை மதிப்பவர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் காப்பாற்றுவதன் வழியாகவே, ஒன்றுபட்ட இந்தியா வலிமையோடு திகழ முடியும் என்பதில் அசைக்க முடியாதநம்பிக்கை கொண்டவர். இளைய தலைமுறையினர் ஊக்குவிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு சம வாய்ப்பு தரப்பட வேண்டும், அதன் வழியாக இந்திய நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் மிகுந்த உறுதியுடன் இருப்பவர்

இந்திய நாட்டுக்கு உத்தர பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்திலிருந்து ஒருவர் தலைமை ஏற்க காலம் கனிந்திருக்கிறது. இந்தியாவின் ஒளிமயமான எதிர்கால வாழ்வுக்கு ஏற்ற ஆட்சியை வழங்கும் திறமை உடைய ஒரே நம்பிக்கை நட்சத்திரம், எம்.ஜி.ஆரின் பூரண நல்லாசியைப் பெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா மட்டுமே.

உலக அரங்கில், இந்தியாவை தலை நிமிரச் செய்யும் நிர்வாகத்தை வழங்கும் ஆற்றல், முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. உலகப் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவை வல்லரசாக மாற்றுவதற்கு, அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவால் மட்டுமே முடியும்.

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், இந்திய நாட்டு வரலாற்றில் மிக இன்றியமையாத தேர்தலாக அமையும். ஊழல், பணவீக்கம், விலைவாசி உயர்வு, கறுப்புப்பண பதுக்கல் போன்றவற்றால், இந்தியப் பொருளாதாரம் சீர்குலைந்து ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுக முழுமையான வெற்றி பெற்றால் மட்டுமே, தேசத்தின் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய இயலும். எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உள்பட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும், அதிமுக தனித்து நின்று வெற்றி பெற வேண்டுமென்பதே நமது இலக்கு.

இருப்பினும் கூட்டணி வியூகங்களை அமைக்கவும், தேர்தல் குறித்துஅனைத்து முடிவுகளையும் எடுக்கவும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு இந்த பொதுக்குழு முழு அதிகாரம் வழங்குகிறது என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

'கருணாநிதிக்கு வாக்களிக்க வேண்டாம்'

மத்திய ஆட்சிப் பொறுப்பில் தொடர்ந்து பல ஆண்டுகள் பங்கேற்றபோதும், எந்த ஒரு நற்செயலையும் செய்யாமல், உலகத் தமிழர்களின் உள்ள மெல்லாம் வேதனை கொள்ளும் வகையில் துரோகம் இழைத்த கருணாநிதியும், அவரைச் சேர்ந்த வர்களும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு கேட்டு வந்தால், தமிழக வாக்காளர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்று இந்த பொதுக் குழு வேண்டி கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

மேலும் இலங்கை பிரச்சினை, மீனவர் பிரச்சினை, தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித்தர மறுப்பது ஆகியவற்றுக்காக மத்திய அரசைக் கண்டித்தும் இந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதமர் வேட்பாளர்?- ஜெயலலிதா பேட்டி

பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, முதல்வர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா?

கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். அதற்கான அதிகாரத்தை கட்சி எனக்கு வழங்கியுள்ளது.

உங்களை பிரதமர் வேட்பாளர் என்று சொல்கிறார்களே?

அது எங்களது கட்சியினர் விருப்பம். அதுபற்றி நான் இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் உங்களது முழக்கம் என்னவாக இருக்கும்?

நாட்டில் அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவையே எங்களது தேர்தல் முழக்கமாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x