

சேலம் விரைவு ரயிலின் சரக்கு பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு 20 மணி நேரத்துக்கு பிறகே பணம் திருடுபோனது தெரியவந்தது என்று ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறிய தாவது:
சேலம் சென்னை எழும்பூர் (விருத்தாசலம் வழியாக) இடையே மொத்த ரயில் பயணம் நேரம் 7 மணி நேரம்தான். ஆனால், சேலம் விரைவு ரயிலில் இருந்த சரக்கு பெட்டியில் சீல் வைக்கப்பட்டு அடுத்த 20 மணிநேரத்துக்கு பிறகே பணம் திருடுபோனது தெரியவந்துள்ளது. அதாவது, கடந்த 8-ம் தேதி மாலை 3 மணிக்கு பணம் ஏற்றப்பட்ட சரக்கு பெட்டிக்கு சீல்வைக்கப்பட்டது. பின்னர், இரவு 9 மணிக்கு புறப்பட்ட சேலம் விரைவு ரயில் இரவு 11.39 மணிக்கு விருத்தாசலம் ரயில் நிலையத்தை சென்றடைந்தது. அங்கு மின்சார இன்ஜின் பொருத்தப்பட்டு இரவு 12.10-க்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு 9-ம் தேதி அதிகாலை 3.57 மணிக்கு வந்தடைந்துள்ளது. சுமார் 43 நிமிடங்கள் முன்னதாகவே வந்துள்ளது. இருப்பினும் அன்றைய தினம் காலை 11 மணிக்கு பிறகே ரயிலில் பணம் கொள்ளைபோனது தெரியவந்துள்ளது. தற்போது இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டாலும், நாங்கள் தேவையான ஒத்துழைப்பை அளிப்போம்.