Published : 14 Jun 2017 10:50 AM
Last Updated : 14 Jun 2017 10:50 AM

மத்திய அரசின் ஓய்வூதியம் பெற 8 ஆண்டுகால போராட்டம்: 86 வயது தியாகிக்கு விரைவில் ஓய்வூதியம் - மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசின் ஓய்வூதியம் பெற கடந்த 8 ஆண்டுகளாகப் போராடி வரும் 86 வயது தியாகிக்கு விரைவில் ஓய்வூதியம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை வசந்த நகரைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணன்(86), உயர் நீதிமன்ற கிளையில் 2013-ல் தாக்கல் செய்த மனு:

நான் சுதந்திர போராட்டத் தியாகி. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றதால் வேலூர் மத்திய சிறையில் 23.12.1943 முதல் 23.12.1944 வரை அடைக்கப்பட்டேன். நான் 6 மாதங்கள் சிறையில் இருந்ததற்கு தியாகிகள் ஐ.மாயாண்டிபாரதி, ஏ.எம்.லெட்சுமணன், ஏ.சி.பெரியசாமி ஆகியோர் சான்றிதழ் அளித்துள்ளனர். நான் தமிழக அரசின் தியாகி ஓய்வூதியம் பெற்று வருகிறேன்.

தியாகிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியம் கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் வழியாக மத்திய உள்துறை (தியாகிகள் ஓய்வூதியம்) செயலருக்கு 2009-ல் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பித்தை மத்திய அரசு 11.7.2013-ல் நிராகரித்தது.

தியாகி மாயாண்டிபாரதி அளித்த சான்றிதழில், மனுதாரர் என்ன வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் என்கிற விவரம் குறிப்பிடப்படவில்லை. இதனால் அவரது சான்றிதழை ஏற்க முடியாது. நான் சிறையில் இருந்ததற்கான ஆவணங்கள் இருப்பில் இல்லை என சிறைத் துறை அதிகாரி வழங்கிய சான்றிதழ் உரிய படிவத்தில் இல்லை. இதனால் அதையும் ஏற்க முடியாது என மத்திய அரசு கூறியிருப்பது தவறு. எனவே மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து எனக்கு சுதந்திரப் போராட்ட தியாகிக்கான ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கு.சாமிதுரை, ஞானகுருநாதன் ஆகியோர் வாதிடும்போது, மாநில அரசின் தியாகி ஓய்வூதியம் பெறுவது மத்திய அரசின் தி்யாகி ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதியாகும் என்றனர்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தியாகிகளில் அனைவருக்கும் தெரிந்தவரான ஐ.மாயாண்டிபாரதி சான்றிதழின் நம்பகத்தன்மையை பொருத்தவரை அவரது சான்றிதழின் அடிப்படையில் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்க பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இதனால், மாயாண்டிபாரதியின் சான்றிதழை ஏற்க முடியாது என மத்திய அரசு கூறியிருப்பதை ஏற்க முடியாது.

இதனால் மனுதாரரின் மனுவை நிராகரித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் மனுவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தியாகி ஓய்வூதியம் தொடர்பாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு 4 வாரங்களில் பரிந்துரை அனுப்ப வேண்டும். இப்பரிந்துரை வந்ததில் இருந்து மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக 4 வாரங் களில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x