

சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘சத்யபாமா பல்கலைக்கழக வேந்தரும், ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் தலைவருமான ஜேப்பியார் மறைவு செய்தியறிந்து வருந்துகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மறைந்துவிட்டார். ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை ஆரம்பித்து, தனது சொந்த உழைப்பால் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி திறமையாக நடத்தி வந்தார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.
வைகோ வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கிராமத்தில் பிறந்த ஜேப்பியார் காவல்துறையில் சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் எம்ஜிஆரின் நம்பிக்கைக்கும், அன்புக்கும் உரியவராக அதிமுகவில் திகழ்ந்தார். சட்டமேலவையில் அதிமுக கொறடாவாகவும், சோதனையான காலகட்டத்தில் சென்னையில் குடிநீர் வழங்கும் பொறுப்பிலும் திறம்பட செயல்பட்டார். ஒரு பொறியியல் கல்லூரி தொடங்கி அதை நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்றினார். தனது விடாமுயற்சியால் அண்ணா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பழகுவதற்கு இனிமையானவர், அவரது மறைவல் வாடும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜேப்பியாரின் உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேற்று அஞ்சலி செலுத்தினார்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் ஜேப்பியார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் கல்வி தாளாளருமான ஜேப்பியார் அவர்களின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகம் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் சார்பாக ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். திரைத்துறையில் நடிகராக, இயக்குநராக ,தயாரிப்பாளராக பல நிலைகளில் அரும்பங்காற்றியவர் ஜேப்பியார். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும்போது அந்த கட்டிடத்துக்கு தேவையான அடிப்படை கட்டுமான பொருட்களை தனது நிறுவனத்தின் மூலம் தருகிறேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் அவர் நம்மைவிட்டு பிரிந்தது தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கும், திரைத்துறைக்கும் மிகப்பெரிய இழப்பாகும்” என்று கூறப்பட்டுள்ளது.