

ஈரோடு மாவட்டத்தில் 16 டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மூடப்பட்டன. அடுத்தகட்டமாக கோபி, சத்தியமங்கலத்தில் உள்ள கடைகளை மூட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதனை நிறைவேற்றும் வகையில், டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் காலை 10 மணிக்கு பதிலாக 12 மணியாக மாற்றப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பொதுமக்களின் எதிர்ப்புக் குள்ளான, கோயில், பள்ளிகள், மருத்துவமனை அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட அரசு முடிவு செய்தது. இதன்படி, நேற்று முதல் மாநிலம் முழுவதும் உள்ள 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. இதில் ஈரோடு மாவட்டத்தில் 16 கடைகள் மூடப்பட்டுள்ளன.
ஈரோடு ரயில் நிலையம், பூங்கா, தீயணைப்பு நிலையம், அவல்பூந்துறை, பாசூர், தாமரைப்பாளையம், விளக்கேத்தி, கவுந்தப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள கடை, வெள்ளோடு, சரளைமேடு, நல்லிசெல்லிபாளையம், ஆவுடையார் பாளையம், குமாரநாயக்கனூர் உள்ளிட்ட இடங்களில் இருந்த 16 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இந்த கடைகளில் பணியாற்றிய விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள், அதிக அளவில் மதுபானங்கள் விற்பனையாகும் கடைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மூடப்பட்ட கடைகளில் கையிருப்பில் உள்ள சரக்குகள் கிடங்குகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே கோபி மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பலமுறை மனு அளிக்கப்பட்டும், முதல்கட்ட பட்டியலில் அந்த கடைகள் மூடப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கோபி தெப்பக்குளம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை, அரசு மருத்துவமனை அருகில் உள்ள டாஸ்மாக் கடை, சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை உள்ளிட்டவற்றை மூட பலமுறை வலியுறுத்தியும், முதற்கட்ட பட்டியலில் இப்பகுதி கடைகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த கட்டமாக இந்த கடைகளையும் மூட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல்லில் 11 கடை
நாமக்கல் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், கோயில்கள், பொதுமக்கள் கூடும் பகுதிகளில் 19 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருவதாக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அதில் மணிக்கட்டிபுதூர், வாழவந்தி, ஜங்கநாயக்கன்பட்டி, கரட்டுப்பாளையம், போடிநாயக்கன்பட்டி, பெரியசோழிபாளையம், காளப்பநாயக்கன்பட்டி, பரமத்தி புறவழிச்சாலை, நாமக்கல் நகரில் சேலம் சாலை, குமரமங்கலம், பெரியமணலி ஆகிய 11 இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் நேற்று நிரந்தரமாக மூடப்பட்டது.