ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டுக்கான வருமான உச்சவரம்பை ரூ. 15 லட்சமாக உயர்த்த வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டுக்கான வருமான உச்சவரம்பை ரூ. 15 லட்சமாக உயர்த்த வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்
Updated on
1 min read

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கான வருமான உச்சவரம்பை ரூ. 15 லட்சமாக உயர்த்த வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி) 27 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் பெற வேண்டுமானால் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சூழலில் ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சம் என்ற வரையறைக்குள் பெரும்பாலோர் வருவதில்லை. இதனால் பிற்படுத்தப்பட்டோருக்கு இடங்கள் அனைத்தையும் நிரப்ப முடிவதில்லை. எனவே, ஓ.பி.சி. பிரிவினர் பயனடையும் வகையில் வருமான உச்சவரம்பை (கிரீமிலேயர்) ரூ. 10 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என பிற்படுத்தப்பட்டோருக்கு தேசிய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டால் ஒ.பி.சி. பிரிவைச் சேர்ந்த பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது திமுக கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதனால்தான் வி.பி.சிங் சமூக நீதிக் காவலர் என வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.

கடந்த 2004-ல் திமுகவின் கோரிக்கையை ஏற்று அன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் கல்வி நிலையங்களில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான ஆணையை பெற்றுத் தந்தார்.

இந்நிலையில் ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டுக்கான கிரீமிலேயரை ரூ. 8 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஆனால் கிரீமிலேயர் உச்சவரம்பை ரூ. 15 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் அசோக் சைனி கோரிக்கை விடுத்துள்ளார். எனவே, ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டுக்கான கிரீமிலேயரை ரூ. 15 லட்சமாக உயர்த்த வேண்டும். அல்லது பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் பரிந்துரை செய்துள்ளபடி ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் அளவுக்காவது உயர்த்த வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in