

தமிழகத்தில் அதிமுகவினர் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமைச்சர்கள் கோட் டைக்கு வராததால் அரசு இயந் திரத்தின் செயல்பாடுகள் பாதிக்கப் படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சிறை சென்றது முதல் தமிழக அமைச்சர்கள் பலரும் பெங்களூர் போவதும் வருவதுமாக உள்ளனர். கடந்த திங்களன்று புதிய அமைச்சரவை பதவியேற்ற பிறகு, அமைச்சர்கள் கோட்டைக்கு வந்து பொறுப்புகளை ஏற்றனர். அதன்பிறகு ஒருவாரமாக யாரும் கோட்டைக்கு வரவில்லை. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் வெள்ளிக்கிழமை வந்து சென்றார். அப்போது, தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கொள்கை முடிவுகள், வளர்ச்சித் திட்டப் பணிகள் போன்றவற்றில் முடிவெடுப்பதில் அமைச்சர்களின் அனுமதி தேவை என்பதால் தற்போதைய நிலை நீடிப்பது உகந்ததல்ல என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாளை (7-ம் தேதி) ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான முடிவு தெரிந்தபிறகே கோட்டைக்கு அமைச்சர்கள் எப்போது வருவார் கள் என்பது பற்றி உறுதியாகக் கூறமுடியும் என்று அமைச்சர் அலுவலகத்தில் உள்ளவர்கள் கூறினர்.
கோட்டைக்கு அமைச்சர்கள் வராததால் பணிகள் பாதிக்கப்பட் டுள்ளதா என்பது பற்றி தலைமைச் செயலக மூத்த அதிகாரிகளிடம் ‘தி இந்து’ தரப்பில் நேற்று கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் கைது சம்பவம் நடந்து 10 நாட்கள்தான் ஆகின்றன. இடையில் ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு புதிய அமைச்சரவை பதவியேற்று விட்டது. அடுத்த 2 நாட்களில் தொடர் விடுமுறை வந்துவிட்டது. எனவே, அமைச்சர்கள் கோட்டைக்கு வராததால் பணிகள் தடைபட்டதாக இப்போதைக்கு கூறமுடியாது.
அதேநேரத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோப்புகளை பார்க்கத் தொடங்கிவிட்டார். கடந்த வெள்ளிக்கிழமைகூட கோப்பு களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் அனைத்துத் துறைகளின் செயலாளர்களும் ‘ரிப்போர்ட்’ செய்யத் தொடங்கிவிட்டனர். ஜெயலலிதாவுக்கு 7-ம் தேதி ஜாமீன் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் அமைச்சர்கள் இருக்கலாம். அதன்பிறகு, அவர்கள் பணிகளில் தீவிரம் காட்டி, முக்கிய கோப்புகளைப் பார்க்கத் தொடங்கிவிடுவர். இந்த வாரமும் பணிகளைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டால், முக்கிய கோப்புகள் நகராமல் அரசு இயந்திரம் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, அதிமுகவினர் மற்றும் பல்வேறு அமைப்புகள், சங்கங்களின் போராட்டங்கள் அதிகரிப்பதால் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. கடைகளை மூட அதிமுகவினர் நிர்ப்பந்திப்பதாக வணிகர்கள் புகார் கூறி வருகின்றனர். தனியார் பஸ்கள் நேற்று ஓடாததால் மாவட்டங்களில் மக்கள் கடும் அவதிப்பட்டனர். 7-ம் தேதி தனியார் பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுகவினரிடம் கேட்டபோது, “ஒதுங்கி நின்றால் அம்மா அனுதாபி அல்ல என்று முத்திரை குத்தப்படுவோம் என்ற உணர்வால்தான் பலரும் போராட் டங்களை நடத்துகின்றனர். சிறையில் ஜெயலலிதா நாளிதழ் படிக்கிறார், டிவி பார்க்கிறார் என்று தகவல் வருவதால் அவரது பார்வை யில் படவேண்டும் என்பதற்காகவே சிலர் நூதன போராட்டங்களை நடத்துகின்றனர்’’ என்றனர்.
ஆனால் ஜெயலலிதாவோ, தன்னை பார்க்க யாரும் வரவேண் டாம். அமைதியாக இருக்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தொடர் போராட்டங்கள் கட்சி விசுவாசத்தை காட்டினாலும், பொது மக்களிடம் நிச்சயம் அனுதாபத்தை பெற்றுத் தராது என்பதே உண்மை.