

தமிழக அரசு செயலற்றுக் கிடப்பதற்கு திருவாரூர் கமலாலய குளக்கரையே சாட்சி என்றார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
திருவாரூரில் கட்சி ஊழியர் களுடன் திங்கள்கிழமை கலந்தாய் வில் பங்கேற்க வந்த ஸ்டாலின், கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி இடிந்து விழுந்து கொண்டிருக்கும் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் கமலாலய குளக்கரையைப் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி:
2012 அக்டோபரில் இடிந்து விழுந்த கமலாலய குளத்தின் வடகரை நீண்ட காலமாகியும் சீரமைக்கப்படாததால், அதை சீரமைக்க திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் என்ற முறையில் திமுக தலைவர் கருணாநிதி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, நிதி ஒதுக்க முன்வந்தார். இதை மாவட்ட நிர்வாகம் நிராகரித்துவிட்டு, இந்து சமய அறநிலையத் துறை நிதியில் குளக்கரை சீரமைக்கப்படும் என்று கூறினார். ஆனால், இதுவரை பணி முடிக்காதது வேதனையளிக்கிறது.
இதற்கிடையில் கடந்த 25-ம் தேதி குளத்தின் மேற்கு கரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதையடுத்து கருணாநிதியின் ஆலோசனைப்படி குளக்கரையை பார்வையிட்டோம்.
இதேபோல மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கொரடாச் சேரி அருகே அபிவிருத்தீஸ்வரம்- கமுககுடி பாலம் கட்ட ரூ.2.40 கோடி நிதி ஒதுக்கியும் இதுவரை அப்பணியை நிறைவேற்ற மாநில அரசு முன்வரவில்லை.
மாநில அரசு செயல்படாமல் இருக்கிறது என்பதற்கு கமலாலயக் குளமே சாட்சி. முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றும், இன்னும் அவரது வீட்டு வாச லில் நிதி அமைச்சர் என்ற பெயர்ப் பலகையே இருக்கிறது. அதிமுக பொதுச்செயலர் ஜெய லலிதா நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரதமர் மோடி தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளையே இப்போதும் அறிவித்து வருகிறார். தமிழகத்தில் திமுக தனித்து அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்” என்றார் ஸ்டாலின்.
தொடர்ந்து, திருவாரூர் அருகே உள்ள இலவங்கார்குடி கிராமத்தில் மழை நீர் சூழ்ந்த நெல் வயலைப் பார்வையிட்டார். அப்போது விவசாயிகள் தங்களின் குறைகளை ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.
கலந்தாய்வுக் கூட்டத்தை முடித் துக்கொண்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மா.மதிவாணனைச் சந்தித்த ஸ்டாலின், திருவாரூர் எம்எல்ஏ கருணாநிதி சார்பில் அளித்த மனுவில், கமலாலயம் குளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும். மழையால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். சேத மடைந்த சாலைகளை போர்க் கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பன உள் ளிட்டக் கோரிக்கைகளை தெரி வித்திருந்தார்.