

மூடப்பட்ட கடைகளை வேறு இடங்களில் திறக்க தமிழக அரசு முயற்சிக்கக்கூடாது என காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த இயக்கத்தின் சார்பில் இன்று வெளியிட்டப்பட்ட அறிக்கையில், "குடி கெடுக்கும் குடியை ஊக்குவிக்கின்ற, சாலை விபத்துகளுக்குப் பெரும் காரணமாக உள்ள மதுக் கடைகளையும், மது பானக் கூடங்களையும் மூடுவதற்கு, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் 90,000 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்த வரையில், நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைந்துள்ள 3,316 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இந்த செய்திகள் மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆனால், இந்த மகிழ்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் வகையில், மூடப்பட்ட கடைகளை வேறு இடங்களில் திறக்க தமிழக அரசு முயற்சி எடுப்பதாக செய்திகள் கசிகின்றன. இந்த நடவடிக்கை முற்றாக நிறுத்தப்பட்டு மூடப்பட்ட கடைகள் மூடப்பட்டவைகளாகவே இருக்க வேண்டும்; பூரண மதுவிலக்கை நோக்கி தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்துகிறது.
காந்திய மக்கள் இயக்கம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தப்படி, வரும் கோடை விடுமுறையில், மாணவ, மாணவிகள் அற வழியில், டாஸ்மாக் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்திட வேண்டும்; அவர்களோடு இணைந்து காந்திய மக்கள் இயக்கமும் களத்தில் இறங்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.