Last Updated : 25 Feb, 2017 10:58 AM

 

Published : 25 Feb 2017 10:58 AM
Last Updated : 25 Feb 2017 10:58 AM

குடும்ப ஆதிக்கத்தின் கட்டுப்பாட்டில்தான் அதிமுக: சொல்லாமல் சொன்ன விழுப்புரம் விளம்பரங்கள்

அதிமுக பொது செயலாளராக சசிகலா, துணைப் பொது செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்ற பிறகு ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் நேற்று கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்தாண்டு வரை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்ட இந்நாள் இந்தாண்டு வெகு சாதாரணமாக கொண்டாடப்பட்டது. விழுப்புரம், திண்டிவனம், திருக்கோவிலூர் உள்ளிட்ட பல இடங்களில் கட் அவுட்கள் கடந்த ஆண்டைக்காட்டிலும் மிகக்குறைந்த அளவில் இருந்தன. பெரிய அளவில் நலத்திட்ட உதவிகளும் நடைபெறவில்லை.

நாளிதழில்களிலும் வழக்கத்தை விட ஜெயலலிதா பிறந்தநாள் விளம்பரங்கள் குறைவாகவே வந்திருந்தன. அதிலும் ஜெயலலிதா படத்துடன் சசிகலா, டிடிவிதினகரன் படங்கள் தவறாமல் இடம்பெற்றிருந்தன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி படம் இடம்பெறவே இல்லை. திண்டிவனத்தில் உள்ள அமைச்சர் சிவிசண்முகம் கொடுத்த விளம்பரத்தில் கூட முதல்வர் எடப்பாடி பழனிசாமி படம் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டதற்கு தங்கள் பெயரை குறிப்பிட வேண்டாம் என்று கூறி சில விவரங்களை தெரிவித்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கென்று ஆதரவாளர்கள் உருவாகிறார்களா என்று கட்சித் தலைமையால் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. கடந்த காலத்தில் முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை முன்னிலைப்படுத்தாதபோதே அவர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதனால் தற்போதைய முதல்வரின் படம் எந்த விளம்பரங்களிலும் வெளிவராமல் இருக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு தலைமை அறிவுறுத்தியுள்ளது.

ஆனாலும் சில நிர்வாகிகள் முதல்வரின் படம் இல்லாமல் அவரின் பெயரை மட்டும் விளம்பரங்களில் வெளியிடுகிறார்கள். அதுவும் விரைவில் கட்டுப்படுத்தப்படும். இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில் எல்லா அமைச்சர்களும் முதல்வர்களே. அதனால் தனியாக முதல்வரின் படம் வெளியிடவேண்டிய அவசியமில்லை'' என்று கூறினர்.

இதுதொடர்பாக தகவல் அறிய விழுப்புரம் மாவட்டத்தின் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தொடர்புகொள்ள முயன்றோம். அவர் தகவல் அளிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x