துணைவேந்தர்கள் நியமனத்திற்கான புதிய நடைமுறையை உருவாக்குக: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

துணைவேந்தர்கள் நியமனத்திற்கான புதிய நடைமுறையை உருவாக்குக: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Published on

துணைவேந்தர்கள் நியமனத்திற்கான புதிய நடைமுறையை தமிழக அரசு உருவாக்கி வெளியிட வேண்டும். அதனடிப்படையில் புதிய துணைவேந்தர்களை தமிழக அரசும், ஆளுனரும் நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் பெலிக்ஸ் நியமிக்கப்பட்டதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.

தகுதியும், திறமையும் நிறைந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு, ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் என்பதால் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றிய முனைவர் பாஸ்கரன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஓய்வுபெற்றார். அதன்பின் 5 மாதங்களாகியும் புதிய துணைவேந்தரை நியமிக்க அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் இருப்பதை பாட்டாளி மக்கள் கட்சி சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து மீன்வளப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் பெலிக்ஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மீனவளப் பல்கலைக்கழகத்திற்கு ஓராண்டுக்குப் பிறகு துணைவேந்தர் நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. ஆனால், பல குற்றச்சாற்றுகளுக்கு உள்ளான ஒருவர் அப்பதவிக்கு வந்திருப்பது வருத்தமளிக்கிறது.

துணைவேந்தர் பதவிக்காக, பெலிக்ஸ் சார்பில் முதலமைச்சர் அலுவலகத்தில் செயலராக பணியாற்றி வரும் அதிகாரி மூலம் ரூ.3 கோடி கையூட்டு தரப்பட்டிருப்பதாக குற்றச்சாற்று எழுந்திருக்கிறது.

புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பெலிக்ஸ் 2008-09ஆம் ஆண்டு மீன்வளக் கல்லூரியில் இணைப் பேராசிரியராக பணியாற்றிய போது, அவர் மேற்கொண்ட ஆய்வுத் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாற்று எழுந்தது.

இதுதொடர்பாக அவர் மீது கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அவரது துறைத்தலைவர் பரிந்துரைத்திருந்தார். அக்குற்றச்சாற்றுகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு ஆட்சியாளர்களின் உதவியுடன் புகார்கள் குறித்த கோப்புகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, பொன்னேரியிலுள்ள அரசு மீன்வளக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் முதல்வராக பதவியேற்ற பிறகு அங்கு பணியாற்றிய ஆசிரியர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டது, பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் ஆராய்ச்சி மாணவி ஒருவர், மாதவரம் மீன்வள ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் ஓர் அலுவலக உதவியாளர் உட்பட பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டது குறித்த குற்றச்சாற்றுகளும் நிலுவையில் உள்ளன.

பல்கலைக்கழகம் என்பது கல்வியை மட்டுமின்றி ஒழுக்கத்தையும் கற்றுத்தரும் ஆலயம் ஆகும். அத்தகைய கல்விக்கோவிலுக்கு பாலியல் புகாரில் சிக்கிய ஒருவரை துணைவேந்தராக நியமிப்பது எந்த வகையில் சரியான நடவடிக்கை ஆகும்? என்பதை தமிழக ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் இத்தகைய அவலம் என்று கூற முடியாது. தமிழகத்தின் சிறிய பல்கலைக்கழகமான வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் தொடங்கி உலகப் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் வரை அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஊழலும், முறைகேடுகளும் பெருமளவில் தலைவிரித்தாடுகின்றன. துணைவேந்தர் பதவிகள் ரூ.10 கோடி முதல் ரூ.100 கோடி வரை விலை பேசி விற்பனை செய்யப்படுகின்றன. துணைவேந்தர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழுவை நியமிப்பதிலேயே ஊழல் தொடங்கிவிடுகிறது.

துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக குழுவின் தலைவராகவும், உறுப்பினர்களாகவும் கல்லூரிகளின் முதல்வர்கள், குறிப்பாக தனியார் கல்லூரி முதல்வர்கள் நியமிக்கப்படுகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளை நிர்வகிக்கும் பல்கலை.களின் துணைவேந்தர்களை கல்லூரி முதல்வர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்க முடியும்? தனியார் கல்லூரி முதல்வர்கள் தங்கள் நிர்வாகத்திற்கு வளைந்து கொடுக்கும் ஒருவரை துணைவேந்தராக தேர்ந்தெடுக்கின்றனர். துணைவேந்தர் வளைந்து கொடுக்கும் போது ஊழல்கள் பெருக்கெடுக்கின்றன.

தமிழகத்தில் துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்க வெளிப்படையான நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். தலைசிறந்த கல்வியாளர்கள் மட்டுமே தேர்வுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும்.

துணைவேந்தர் பதவிக்கு குறைந்தபட்ச பணி அனுபவம், வயது, முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டிய அனுபவம், எழுதி வெளியிட்ட நூல்கள் ஆகியவை குறித்த தகுதிகள் தெளிவாக நிர்ணயிக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் துணைவேந்தர் பதவிக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்களையும், அவர்களில் இருந்து துணைவேந்தர் பதவிக்கு பரிசீலிப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட பெயர்களையும் தேர்வுக்குழு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

கடைசியாக ஆளுனருக்கு பரிந்துரைக்கப்படும் 3 பேரின் விவரங்களும், அவர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதை மக்கள் ஆய்வுக்காக தேர்வுக்குழு தெரிவிக்க வேண்டும். அவர்களிலிருந்து ஒருவரை துணைவேந்தராக நியமிக்கும் போது அவருக்குள்ள சிறப்புத் தகுதிகள் என்ன? என்பதை ஆளுனர் அலுவலகம் விளக்க வேண்டும். அப்போது தான் துணைவேந்தர் நியமனத்தில் ஊழலை ஒழிக்க முடியும்.

எனவே, துணைவேந்தர்கள் நியமனத்திற்கான புதிய நடைமுறையை தமிழக அரசு உருவாக்கி வெளியிட வேண்டும். அதனடிப்படையில் புதிய துணைவேந்தர்களை தமிழக அரசும், ஆளுனரும் நியமிக்க வேண்டும்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in