கன்டெய்னர் லாரி மீது பைக் மோதல்: 2 மாணவர்கள் பலி; ஒருவர் படுகாயம் - ஹெல்மெட் அணியாததால் விபரீதம்

கன்டெய்னர் லாரி மீது பைக் மோதல்: 2 மாணவர்கள் பலி; ஒருவர் படுகாயம் - ஹெல்மெட் அணியாததால் விபரீதம்
Updated on
2 min read

அம்பத்தூர் அருகே பைபாஸ் சாலையில் பழுதாகி நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது வேகமாக வந்த பைக் மோதியதில் 2 கல்லூரி மாணவர்கள் பலியானார்கள். படுகாயம் அடைந்த மற்றொரு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.

கொடுங்கையூரைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் விக்னேஷ் (18). மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். மாதவரத்தைச் சேர்ந்தவர் சூர்யா (19) மற்றும் கொடுங்கையூரைச் சேர்ந்த பிரனாய் (19) ஆகியோரும் அதே கல்லூரியில் பி.காம் படித்து வருகின்றனர். நண்பர்களான 3 பேரும் கொடுங்கையூரில் இருந்து நேற்று காலை 9.30 மணிக்கு ஒரே பைக்கில் கல்லூரிக்கு புறப்பட்டனர். பைக்கை விக்னேஷ் ஓட்டியுள்ளார். புழல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் அவர்கள் கல்லூரிக்கு சென்றுக் கொண்டிருந்தனர். காலை 10 மணி அளவில் அம்பத்தூர் சிட்கோ அருகே சாலையில் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது அவர்களின் பைக் மோதியது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.

இதைப் பார்த்த பொதுமக்கள் 108 ஆம்புலன் ஸுக்கும், போலீஸாருக்கும் தகவல் கொடுத்த னர். விரைந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீஸார், 3 பேரையும் 108 ஆம்புலன்ஸில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே விக்னேஷ், சூர்யா உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரனாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஹெல்மெட் அணியவில்லை

இந்த விபத்து பற்றி பூந்தமல்லி போக்குவரத்து போலீஸாரிடம் கேட்டபோது, “3 மாணவர்கள் ஒரே பைக்கில் கல்லூரிக்கு வந்தனர். யாரும் ஹெல்மெட் அணியவில்லை. இந்த பைபாஸ் சாலையில் வண்டிகளை நிறுத்தக்கூடாது. ஆனால் கன்டெய்னர் லாரி பழுதாகிவிட்டதால் நிறுத்தப்பட்டுள்ளது. அதிவேகமாக பைக்கில் வந்த மாணவர்கள், நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுநரை தேடி வருகிறோம்” என்றார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் கூறியதாவது:

தமிழகத்தில் சென்னை போன்ற மாநகரில் மக்களின் தேவையை அடிப்படையாக கொண்டு ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. மற்ற மாநிலங்களில் இருப்பது போல் வாகனங்களை நிறுத்துவதற்கு இங்கு பணிமனை வசதி இல்லை. இதனால், புறநகர் பகுதிகளின் சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஏற்கனவே இருக்கும் குறுகிய சாலைகளில் இந்த வாகனங்களை நிறுத்துவதால், சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை சுட்டிக்காட்டித்தான் கனரக வாகனங்களுக்கு தனியாக பணிமனை அமைத்து தரவேண்டும் என கூறி வருகிறோம்.

இதற்காக கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது. பூந்தமல்லி புறநகர் பகுதியில் இடத்தை தேர்வு செய்து, பணிமனை அமைத்துத் தந்தால் புறநகர் நெடுஞ்சாலைகளில் சாலை விபத்து குறைவதுடன், போக்குவரத்து நெரிசலும் குறையும். மேலும், போக்குவரத்து போலீஸாரும் துல்லியமாக திட்டமிட்டு வாகனங்களில் ஆய்வு செய்யாமல் பல்வேறு இடங்களில் திடீரென ஆய்வு நடத்துகிறார்கள். குறிப்பாக, ஒரே வாகனத்தை புறநகர் பகுதியிலும், மாநகரில் உள்ளே வரும்போதும் பல இடங்களில் சோதனை செய்கிறார்கள். இதனால், நேரம் விரயம் ஆவதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in