

நடிகர் ரஜினிகாந்த் தன்னை மிகச்சிறந்த நிர்வாகி என்று பாராட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக் கிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 67-வது வார்டில் நேற்று நடந்த விழாவில், திமுக செயல் தலைவரும், சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
நான் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகி இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இத்தொகுதியில் நான் மக்களுடைய கோரிக்கைகளை கேட்டு, அவர்கள் தரும் மனுக்களை பெற்று கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறேன்.
திமுக தலைவர் கருணாநிதியின் 60 ஆண்டுகால சட்டமன்றப் பணிகளைப் பாராட்டி வைர விழாவாகவும், கருணாநிதியின் பிறந்த நாளையும் இணைத்து மிகப்பெரிய விழாவாக வரும் ஜூன் 3-ம் தேதி கொண்டாட இருக்கிறோம். அந்த விழாவில், அகில இந்திய அளவிலான சில முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளனர். அந்த விழாவில் கருணாநிதி கலந்துகொள்வாரா, கலந்துகொள்ள மாட்டாரா என்ற விவாதம் உள்ளது. கருணாநிதி அந்த விழாவில் பங்கேற்க வாய்ப்பில்லை. ஒருவேளை மருத்துவர்கள் அனுமதி அளித்தால் கலந்துகொள்ளலாம்.
நடிகர் ரஜினிகாந்த் என்னை மிகச்சிறந்த நிர்வாகி என்று தெரிவித்திருப்பதை அவருடைய பாணியிலே, மொழியிலே சொல்ல வேண்டுமானால் ‘மகிழ்ச்சி’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்)
நடிகர் ரஜினிகாந்த் தீவிரமான அரசியலில் ஈடுபட போகிறார் என்பது உறுதியாகியுள்ளது. அதை பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர். அந்தவகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் வரவேற்கிறோம். இந்திய குடிமகனாக இருக்கும் யாரும் பொது வாழ்க்கையில் ஈடுபட சுதந்தரம் உண்டு, உரிமை உண்டு. அதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.
அனைத்து தரப்பினருக்குமான தலைமையை கொடுக்கிற ஆற்றலை பெற்றவராக ரஜினி காந்த் விளங்குவார் என்பதை நாம் பார்க்க முடிகிறது. இது சாதிய மதவாத சக்திகளுக்கு பெரிய பின்னடைவாக இருக்கும். அவர் ஏதேனும் ஒரு இயங்கிக் கொண்டிருக்கிற அரசியல் கட்சியுடன் இணைந்தால் அவர் எதிர்பார்க்கிற வலிமையை பெற முடியாது.
சீமான் (நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்)
நாங்கள் மக்கள் முன்னால் வைத்த கருத்துகளை ரஜினிகாந்த் கவனித்துள்ளார் என்பது மேலும் உத்வேகத்தை தருகிறது. இன்னும் மக்களுக்காக உழைக்க வேண்டியது இருக்கிறது என்கிற உற்சாகத்தை கொடுக்கிறது. புகழ்பெற்ற திரைக்கலைஞரான அவர், இதையெல்லாம் கவனிக்கிறார் என்பது மகிழ்ச்சியை தருகிறது. அதுபோன்ற கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி.
அன்புமணி ராமதாஸ் (பாமக இளைஞரணித் தலைவர்)
ரஜினிகாந்த் என் நண்பர். அவர் நடிப்பை ரசிப்போம். தற்போது தமிழ்நாடு மிக மோசமான சூழலில் இருக்கிறது. அவசர சிகிச்சை பிரிவில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ரூ. 5.75 லட்சம் கோடி கடன் உள்ளது. ஊழலில் தமிழகம் தத்தளிக்கிறது. நிர்வாக திறமையில்லாத சூழல் இருப்பதால் பெரிய மாநிலங்கள் வரிசையில் தமிழகம் பின்தங்கியுள்ளது. இந்த சூழலில் தமிழகத்துக்கு தேவை நடிகர் அல்ல. நல்ல நிர்வாக திறமையுள்ள தலைவர்தான்.