

பொறியியல் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் இன்று வெளி யிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பொது கலந்தாய்வு 27-ம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் அண்ணா பல் கலைக்கழக கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் வழங்கப்படும் பி.இ., பி.டெக். படிப்புகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழக பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. ஒற்றைச்சாளர முறையில் மாணவர்கள் ஒவ் வொரு கல்லூரிக்கும் தனித் தனியே விண்ணப்பிக்க வேண்டாம், ஒரேயொரு விண்ணப்பம் போட் டாலேபோதும். கலந்தாய்வின் போது தங்களுக்கு பிடித்தமான கல்லூரியையும், விருப்பமான பாடப்பிரிவையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு பொறியியல் பட்டப் படிப்புகளில் சேர ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 994 பேர் விண்ணப்பித்தனர். அவர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் நேற்று முன்தினம் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பொறியியல் படிப்புக்கு விண்ணப் பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் 22-ம் தேதி வெளியிடப் படும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது. அதன்படி தரவரிசைப் பட்டியல் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படுகி றது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று காலை 10 மணிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன். தரவரிசைப் பட்டியலையும், 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பட்டியலையும் வெளியிடுகிறார்.
இதைத் தொடர்ந்து சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்படும். 24-ம் தேதி விளையாட்டுப் பிரிவினருக்கும், மறுநாள் (25-ம் தேதி) மாற்றுத் திறனாளிகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 27-ம் தேதி தொடங்கி, ஒரு மாதம் நடக்கிறது. தினமும் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். மாணவர்கள் கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை அண்ணா பல்கலைக்கழக இணையதளத் தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள் ளது. கலந்தாய்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகின்றன.