

சென்னை - மியான்மர் இடையே எஸ்சிஐ கமல்’ என்ற சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங் கப்பட்டுள்ளது. சென்னை துறை முகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய கப்பல் துறை செயலாளர் டாக்டர் விஷ்வபதி திரிவேதி இதைத் தொடங்கிவைத்தார்.
இந்திய ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், இந்தியா, மியான்மர் நாடுகளுக்கிடையே சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை, கிருஷ்ணபட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து மியான்மர் நாட்டில் உள்ள யாங்கூன் நகருக்கு சரக்கு கப்பல்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக, ஷிப்பிங் கார்ப்பரேஷனின் ‘எஸ்சிஐ கமல்’ என்ற கப்பல் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த கப்பல் போக்குவரத்தின் தொடக்க விழா, சென்னை துறைமுகத்தில் உள்ள கன்டெய்னர் முனையத்தில் நேற்று நடைபெற்றது. மத்திய கப்பல் துறை செயலாளர் டாக்டர் விஷ்வபதி திரிவேதி இதைத் தொடங்கிவைத்தார். சென்னை கண்டெய்னர் டெர்மினல் நிறுவனத்தின் இயக்குனர் என்னராசு கருணேசன், கேப்டன் நருல்லா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர்களிடம் டாக்டர் விஷ்வபதி திரிவேதி கூறியதாவது:
இந்தியா - மியான்மர் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவதன் மூலம், இருநாடுகளுக்கிடையே சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறவுள்ளது. இக்கப்பல் போக்குவரத்து சென்னை, கிருஷ்ணபட்டினம், விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து இயக்கப்படும்.
சேது சமுத்திர திட்டம்
சேதுசமுத்திர திட்ட விவகாரத்தில் மத்திய அரசின் நிலை குறித்து மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் இன்னும் ஒரு மாதத்தில் அறிவிப்பார். சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக தொடங்கப்பட்ட ‘எம்ரிப்’ திட்டம், தமிழக அரசின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மப்பேட்டில் உலர் துறைமுகம் அமைக்க 121 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாண்டுகளுக்குள் இத்துறை முகம் செயல்படும்.
இவ்வாறு விஷ்வபதி திரிவேதி கூறினார்.