Published : 13 Apr 2017 07:41 AM
Last Updated : 13 Apr 2017 07:41 AM

பேரிடர் நிகழும்போது மீட்பு நடவடிக்கைகளில் மாநில அரசின் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும்: வருவாய் நிர்வாக ஆணையர் வலியுறுத்தல்

பேரிடர் மீட்பு பணியின்போது அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று மாநில வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ), யுனிசெப் மற்றும் மத்திய அரசு சார்பில் பருவநிலை மாற்றம், பேரிடர் அபாய குறைப்பு பற்றிய 2 நாள் தேசிய மாநாடு சென்னையில் நடந்தது. இந்த மாநாட்டை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் கமல் கிஷோர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கமல் கிஷோர், “இந்தியாவில் 56 சதவீத பகுதிகள் பேரிடர் பாதிப்பு நிறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதில் கடலோர பகுதிகள்தான் அதிகம். பேரிடர்கள் நிகழும்போது உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்புகள் பெரிய அளவில் ஏற்படுகின்றன. இந்தியாவில் பேரிடர்களால் சராசரியாக ஆண்டுக்கு 126 மில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதார பாதிப்புகள் உண்டாகின்றன” என்றார்.

இந்த மாநாட்டில் தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையரும், மாநில பேரிடர் மேலாண்மை துயர் துடைப்பு ஆணையருமான கே.சத்யகோபால் பேசியதாவது:

இயற்கை பேரிடர்கள் நிகழும் அபாயம் நிறைந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. கடந்த ஆண்டு வர்தா புயலாலும் கடும் வறட்சியாலும் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வறட்சி நிலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. புயல், வெள்ளப்பெருக்கு, பூகம்பம் போன்ற பேரிடர்களை கையாள்வதற்கான முன்தயாரிப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது.

பேரிடர்கள் நிகழும் அபாயம் நிறைந்த பகுதிகள் கண்டறியப்பட்டு அவை பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பணிகளுக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. பேரிடர்கள் நிகழும்போது மீட்பு பணிகளில் அனைத்து அரசு துறைகளும் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம்.

பேரிடர் மீட்பு பணிக்காக 1,145 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 14,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சமுதாயம் சார்ந்த பேரிடர் மேலாண்மை குழு அமைப்புகள் செயல்படும் ஒருசில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மாநில பேரிடர் மேலாண்மை முகமை மூலம் பேரிடர் பாதிப்புகளை கையாள்வது குறித்து 1,400 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் இந்த குழுவினர் அண்டை மாநிலங்களிலும் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை காட்டிலும் 20 சதவீதம் குறைவாக பெய்தது. கடும் வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். 32 லட்சம் விவசாயிகளுக்கு நேரடியாக மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் ரூ.2,247 கோடி வறட்சி நிவாரண நிதி வழங்கப்பட்டது. பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு பணியில் அதிக கவனம் செலுத்தும் அதேவேளையில் அவை வராமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உரிய முறையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டால் மீட்பு நிவாரண பணிக்கான செலவினங்கள் பெருமளவு குறையும்.

இவ்வாறு சத்யகோபால் கூறினார்.

இந்த மாநாட்டில், குழந்தைகளின் திறன்களை மேம்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கான ஆவணங்களை யுனிசெப் இந்தியா துணை பிரதிநிதி ஜேம்ஸ் கிட்டா, சிஐஐ தென்பிராந்திய முன்னாள் தலைவர் டி.டி.அசோக் ஆகியோர் பரிமாறிக்கொண்டனர். முன்னதாக, சிஐஐ தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவர் என்.கே.ரங்கநாத் வரவேற்றார். யுனிசெப் தமிழ்நாடு, கேரளா தலைமை கள அதிகாரி ஜாப் சச்சாரைய்யா அறிமுகவுரை ஆற்றினார். தமிழ்நாடு சிஐஐ தலைவர் பி.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x