

தமிழகத்தில் இயக்கப்படும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்களில் சுமார் 4,500 பஸ்களில் வைப்பர்கள் சரியாக இயங்கவில்லை. இதனால், மழைக் காலத்தில் பஸ்சை சரியாக ஓட்ட முடியாமல் ஓட்டுநர்கள் அவதிப் படுவதாக தெரிவித்துள்ளனர்.
பஸ்களின் முன்கண்ணாடியில் இருக்கும் வைப்பரை இயக்க மேல் பகுதியில் சிறிய வடிவிலான மோட்டார் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் வைப்பர் இயங்கும். இதன் முக்கிய பணி மழைகாலத்தில் கண்ணாடியில் விழும் மழைநீரை துடைப்பது தான். விழும் மழைநீரை நன்றாக துடைத்து கண்ணாடி பளிச்சென்று தெரிந்தால்தான் ஓட்டுநர்கள் சாலையை சரியாக பார்த்து ஓட்ட முடியும். ஆனால், தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பஸ்களில் சுமார் 4,500 பஸ்களில் வைப்பர்கள் இயங்காமல் இருக்கிறது என்று பஸ் ஓட்டுநர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், ‘‘கனமழை பெய்தால் பஸ்களை ஓட்டுவதற்கு சிரமமாக இருக்கிறது. வேகத்தை குறைத்து, கண்ணாடிகளை துடைத்து விட்டுத்தான் ஓட்டுகிறோம். எவ்வளவு நேரம் தான் இப்படியே கண்ணாடிகளை துடைத்து விட்டு ஓட்டுவது. உள்ளூர் பஸ்களில் அடிக்கடி பஸ் நிறுத்தம் வரும். அப்போதெல்லாம் துடைத்து விடுவோம். ஆனால், நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் கொஞ்சம் கவனம் சிதறினாலும், பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, கனமழையினால், சாலைகளில் மேடும், பள்ளத்துடன் கவனமாக பஸ்சை ஓட்ட வேண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 4,500 பஸ்களில் வைப்பர்கள் சரியாக இயங்குவதில்லை. அதுபோல், பஸ்களின் பாடிகளில் ஏற்பட்டுள்ள சிறிய ஓட்டைகளால் மழைநீர் கசிந்து உள்ளே வருகிறது. பஸ்சுக்குள் இருக்கும் பயணிகள் எங்களை தான் கேட்கிறார்கள். இதேபோல், பஸ்களில் இருக்கும் பக்க கண்ணாடிகளும் உடைந்து இருக்கிறது. இதெல்லாம் சிறிய, சிறிய பொருட்கள் தான். ஆனால் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. பழுதுகளை சரிசெய்ய பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயன் இல்லை’’ என்கிறார்கள்.
இது தொடர்பாக தொமுச பொருளாளர் நடராஜனிடம் கேட்ட போது, ‘‘மழைக்காலத்தில் பஸ் மேல் தார்பாய் சரிசெய்தல், உடைந்த ஜன்னல்கள், கதவுகள் பொருத்துதல், வைப்பர் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான பொருட்கள் வாங்கி சரிசெய்யப்படும். ஆனால், இப்போது அப்படி வாங்குவதில்லை. மேலும், தொழில்நுட்ப பிரிவில் போதிய அளவில் ஆட்கள் இல்லை. இதில் இருக்கும் ஆட்களை கூட வேறொரு பணிக்கு பயன்படுத்துகிறார்கள்’’ என்றார்.
அதிகாரிகள் மறுப்பு
போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பஸ்களுக்கு இயக்க செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது. இதற்காக தேவையற்ற வீண் செலவை குறைக்கிறோம். ஆனால், பஸ்களின் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நிதி ஒதுக்கி மேற்கொள்ளப்பட்டு தான் வருகிறது. மேலும், அரசு போக்குவரத்து கழகங்களில் தற்போது புதிய பஸ்கள் அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது. எனவே, அடுத்த சில ஆண்டுகளில் அரசு போக்குவரத்து கழகத்தில் புதிய பஸ்கள் அதிகமாக இருக்கும்’’ என்றனர்.