

உயிரினங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த அழகிய பூமிப்பந்தை பாதுகாக்க வேண்டுமெனில், இனிவரும் நாட்களில் கண்ணில் படும் இடமெல்லாம் விதைப் பந்துகளை வீசிச் செல்லுங்கள் என்கின் றனர் இயற்கை ஆர்வலர்கள்.
விதைப் பந்து என்பது செம்மண்அல்லது களிமண் மற்றும் பசுஞ்சாணம், இயற்கை உரம் கொண்ட கலவையால் உருவாக்கப்படும் உருண்டை. இதன் நடுவில் பயன்தரும் மூலிகை, மலர் மற்றும் மரங்களின் விதைகள் இருக்கும். நீர்ச்சத்துடன் கூடிய விதைப் பந்தில் உள்ள விதைகள் ஓராண்டுவரை முளைப்புத் திறன் கொண்டதாக இருக்கும். மேலும், மண்ணில்கலந்துள்ள சாணம், நுண்ணுயிரி களை உருவாக்கி செடியின் வேர், மண்ணில் எளிதில் செல்லும் வகையில் பக்குவப்படுத்திவிடும்.
வெறும் விதைகளை நேரடியாக விதைக்கும்போது அவை எலி,எறும்பு, குருவி போன்ற உயிரினங்களுக்கு இரையாகும் வாய்ப்பு உள்ளது. மேலும், கடும் வெப்பத்தால் முளைப்புத் திறனை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படும்.வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பழங்கள், காய்கறிகளில் இருந்து கிடைக்கும் விதைகளைச் சேகரித்து, ஓய்வு நேரத்தில் எளிதாகவிதைப் பந்துகளை உருவாக்க லாம். உருவாக்கப்பட்ட பந்துகளைவிளைநிலங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் வீசிச் செல்லலாம். இயற்கை மீது ஆர்வம் உள்ளவர்கள் மூலிகை, மரங்களின் விதைகளை வாங்கி விதைப் பந்துகளை உருவாக்கி, சுற்றுலா செல்லும்போது காடுகளை ஒட்டிய பகுதிகளில் வீசலாம். மரக்கன்று களை நட்டுப் பராமரிப்பதை விட, இந்த முறை எளிது.
பள்ளி மாணவர்கள் மற்றும் இயற்கையை நேசிக்கும் மனிதர்களிடம் விதைப் பந்து உருவாக்கும் முறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ‘இறகுகள்’ அமைப்பினர் அண்மையில் திருச்சியில் 200 கிலோ மண், 2 கிலோ மர விதைகள் மூலம் 4 ஆயிரத்துக்கும் அதிகமான விதைப் பந்துகளை உருவாக்கினர். அதனை தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் வீசும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விதைப் பந்துகளுடன் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள்
இதுகுறித்து ‘இறகுகள்’ அமைப்பின் நிறுவனர் ராபின் கூறும்போது, “விதைப் பந்து முறை நம் முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற அரிய பொக்கிஷம். உதாரணமாக, கிராமங்களில் வெள்ளரிப் பழத்தில் இருந்து எடுக்கப்பட்ட விதையை மாட்டுச் சாணத்தில் உருட்டி வைத்து பல மாதம் கழித்து கோடை காலம் தொடங்கும் முன் கண்மாய், குளங்களில் வீசிவிடுவது வழக்கம்.
அந்தமுறையில், பலன் தரும் மரங்களை உருவாக்கும் முயற்சியின் முதல்கட்டமாக விதைப் பந்துகளை உருவாக்கி வைத்துள்ளோம். தற்போது அரசு சீமைக் கருவேல மரங்களை அழித்து வரும் பகுதிகளில், கோடை விடுமுறையில் மாணவர்களைக்கொண்டு விதைப் பந்துகளை வீச உள்ளோம். 3 ஆயிரம் விதைப் பந்துகளை வழங்கத் தயாராக இருக்கிறோம். ‘வளர்ந்தால் மரம் இல்லையேல் மண்ணுக்கு உரம்’ என்ற எண்ணத்தில் விதைப்பந்து வீசுவோம்” என்றார்.