

திண்டுக்கல்லில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை கொல்ல முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டணை வழங்கி நீதிபதி அசோகன் உத்தரவிட்டார்.
திண்டுக்கல் அருகே மாசிலாமணிபுரத்தில் வசித்து வந்தவர் ஆர்எஸ்எஸ் இயக்க மாவட்டஅமைப்பாளர் பாஸ்கரன் (32). 2008 டிசம்பர் 21-ம் தேதி பாஸ்கரனை அவரது வீட்டருகே சிலர் வெட்டிக் கொல்ல முயன்றனர். இதில் பாஸ்கரனின் கால் துண்டானது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்த அக்பர் மகன் இலியாஸ், பேகம்பூரை சேர்ந்த அப்துல்ரஹீம் மகன் ரஹமத்துல்லா, மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் ரியாஸ் என்ற ஜானகிராமன், இப்ராகிம் மகன் சையது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் நீதித் துறை நடுவர் மன்ற நீதிமன்றத்தில் நீதிபதி அசோகன் முன்னிலையில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் ஜூன் 27-ம் தேதி முடிவுற்ற நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப் பட்டது. தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி அசோகன் உத்தர விட்டார்.
தீர்ப்பு வழங்கப்படுவதை யொட்டி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.