

சிறுதாவூர் பங்களாவுக்கு கன்டெய்னர் மூலம் பணம் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
முன்னதாக ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில், லாரி லாரியாக பணம் கொண்டு செல்லப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பங்களாவை சோதனையிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், ராஜேஷ் லக்கானி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை வந்த 4 ஆயிரத்து 700 புகார்களில் 4 ஆயிரத்து 600 தீர்வு காணப்பட்டுவிட்டது.
சிறுதாவூர் பங்களாவுக்கு கன்டெய்னர் மூலம் பணம் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் தெரிவித்துள்ளனர். அதுதொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.17 கோடி 31 லட்சம் பிடிபட்டது. இதில், உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததால் ரூ.15 கோடி திருப்பித் தரப்பட்டுவிட்டது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 5 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்யும்படி அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது''.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.