

இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை விதிப்பது தனி மனித அடிப்படை உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று தமாகா தலைவர் வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாடு முழுவதும் உள்ள பல்வேறு இன மக்கள் பல்வேறு விதமான உணவுப் பழக்கவழக்கங்களை கொண்டுள்ளனர். பல்வேறு மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களில் பலர் மாட்டிறைச்சியையும் தங்களின் உணவுப் பழக்கத்தில் பயன்படுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு மக்கள் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வரும் உணவுப்பழக்கங்களில் கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மத்தியில் ஆளும் அரசு புதிய தடையை விதித்திருக்கிறது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகம் போன்றவற்றை பயன்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தடை விதித்துள்ளது. இது ஏற்புடையதல்ல. காரணம் இத்தடை தனி மனித அடிப்படை உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
நாட்டு மக்களின் நலனில் அக்கறை இருந்தால் அவர்கள் ஏற்க விரும்பாத நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டாம். எனவே அரசு எந்த ஒரு புதிய திட்டத்தை கொண்டு வர நினைத்தால் அது பொது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக அமையக்கூடாது.
அதே நேரத்தில் புத்தம் புதிய திட்டங்களும், சட்டத்திருத்தங்களும் பொது மக்களிடையே திணிக்கும் வகையிலும், கட்டாயப்படுத்தும் வகையிலும் அமையக்கூடாது.
மேலும் மத நல்லிணக்கத்திற்கும், தேச ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும் இது போன்ற தேவையற்ற நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசு ஈடுபடக்கூடாது.
மத்திய பாஜக அரசு நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும். அதனை விட்டுவிட்டு தேவையற்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசு திடீர் திடீரென்று எடுப்பது அனைத்து சமூக இன மக்களுக்கும் விரோதமானதாகும். எனவே மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பதை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு திரும்ப பெற வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.