

எண்ணூரில் மீனவர்களின் 60 குடிசைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
சென்னை எண்ணூர் கே.வி.கே. குப்பம் மீனவர் கிராமத்தில் நூற்றுக்கும் அதிகமான குடிசை வீடுகள் உள்ளன. நேற்று முன் தினம் இரவு துரைசாமி என்பவ ரின் குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் அருகே இருந்த குடிசை வீடுகளுக்கும் தீ பரவியது. தீயை அணைக்க மீனவர்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தன.
தகவலின்பேரில் திருவொற்றி யூர், தண்டையார்பேட்டை, எண்ணூர், மணலி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து 5 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயில் 60 குடிசைகள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. வீட்டுக்குள் இருந்த பொருட்களும் தீயில் எரிந்துவிட்டன.
தீயில் சிக்கி அமிர்தலிங்கம் (50) என்ற மீனவர் காயம் அடைந்தார். அவரை அருகே இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து எண்ணூர் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியை அமைச்சர் ஜெயக்குமார், எம்எல்ஏ கே.பி.பி.சாமி, கோட்டாட்சியர் வீரப்பன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தீயில் வீடுகளை இழந்தவர்கள் அருகே உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.