

அறக்கட்டளைகள் பெயரில் நன்கொடை வாங்கி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபடும் மருத்துவம், பொறியியல் கல்வி நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் 4 வாரங்களில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஜவஹர்லால் சண்முகம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:
கல்வி நிறுவனங்கள் அறக்கட்டளைகளைத் தொடங்கி மாணவர்களிடம் கல்லூரி சேர்க்கைக்காக கோடிக்கணக்கில் நன்கொடை பெறுகின்றன. ஆனால் இந்த நன்கொடைகளுக்கு சட்ட விரோதமாக வருமான வரிச் சலுகையும் பெறுகின்றன. இதுபோல ஒவ்வோர் ஆண்டும் ரூ.3 ஆயிரம் கோடி முதல் ரூ.4 ஆயிரம் கோடி வரை இந்த நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபடுகின்றன. சமீபத்தில் கூட வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல நூறு கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வருமான வரிச் சலுகையை பெற வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டுள்ளது. கருப்புப் பண புழக்கத்துக்கும் இந்த தனியார் கல்வி நிறுவனங்கள்தான் மூலகாரணம். வருமான வரிச் சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி கோடிக்கணக்காக பணம் மோசடி செய்யப்படுகிறது. அந்த கல்வி அறக்கட்டளைகள் எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டவை? அவற்றின் வரவு-செலவு என்ன? என்பதை வருமான வரித்துறையினர் முறையாக ஆய்வு செய்வது இல்லை.
உண்மைகளை மறைப்பதற்காக ஒரே அறக்கட்டளை பெயரில் பல கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. முறைகேட்டில் ஈடுபடும் அறக்கட்டளைகளுக்கான வரிச் சலுகையை ரத்து செய்ய வருமான வரித்துறையினருக்கு அதிகாரம் உள்ளது.
எனவே இந்த மோசடி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை ரத்து செய்யக்கோரி கடந்த 2015 மே மாதம் நான் கொடுத்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொழிற் கல்விகளை வழங்கும் ஏஐசிடிஇ, எம்சிஐ, யுஜிசி, நாக் போன்ற அமைப்புகளும் கண்டுகொள்ளவில்லை.
எனவே இந்த கல்வி அறக்கட்டளை நிறுவனங்கள் தங்களின் ஆண்டு நிதிநிலை அறிக்கை மற்றும் ஆண்டு வருமான அறிக்கையை தங்களது இணையதளத்திலும், பொது இணையதளத்திலும் வெளியிட உத்தரவிட வேண்டும்.
மேலும் அவற்றின் வரிச்சலுகையை ரத்து செய்து அக்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தடையில்லா சான்று, அடிப்படைத் தேவை சான்றுகளையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, இது குறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.