

பாலக்காடு நகரில் 2 கிமீ இடைவெளிகளில் நகராட்சிப் பேருந்து நிலையம், நகரப் பேருந்து நிலையம், ஸ்டேடியம் பேருந்து நிலையம், கே.எஸ்.ஆர்.டி.சி. வெளியூர் பேருந்து நிலையம் என 4 பேருந்து நிலையங்கள் உள்ளன. இவற்றில் முதன்மையானது கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்து நிலையம். இங்கு கோழிக்கோடு, எர்ணாகுளம், மன்னார்காடு செல்லும் பேருந்துகள் மட்டுமின்றி, கோவை, பெங்களூரு செல்லும் பேருந்துகளும் வருகின்றன.
பழமையான இந்தப் பேருந்து நிலையக் கட்டிடங்கள் பழுத டைந்துவிட்டதால், அவற்றைச் சீரமைப்பதற்காக 3 ஆண்டு களுக்கு முன், பழைய கட்டிடங் களை இடித்தனர். ஆனால், இது வரை புதிய கட்டிடங்கள் கட்டப்பட வில்லை. இதனால் இங்கு வரும் பயணிகள் வெயிலால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து இப்பகுதி தொழிலா ளர்கள், கடைக்காரர்கள், ஆட்டோ டிரைவர்கள் கூறியதாவது:
தினமும் இங்கு 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்லும். பல்லாயிரக்கணக்கான பயணிகள் வரும் இந்த பேருந்து நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சிறிய நிழற்குடைகள்கூட கிடையாது. புதிய கட்டிடங்களைக் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால், கேரளா ஸ்டேட் ரோடு டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனின் பாலக்காடு பிரிவு தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்தவர் கள் பிரச்சினை காரணமாக, குறிப்பிட்ட கட்டிடம் இடிக்கப்பட வில்லை. அதனால் பேருந்து நிலையப் பணிகள் தாமதமாகின. தற்போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. விரைவில் பேருந்து நிலையத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என நம்புகிறோம் என்றனர்.
கே.எஸ்.ஆர்.டி.சி. தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக எம்.எல்.ஏ. ரூ.2.20 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். அரசுத் தரப்பில் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால், டெண்டர் எடுத்தவர், இந்தப் பணியை செய்ய முடியாது என்று கூறிவிட்டார். இதற்கிடையில், டெண்டர் கேட்ட மற்ற இருவர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் ஒருவர் பணியில் ஈடுபட சம்மதித்துவிட்டார். எனவே, விரைவில் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது. மற்றபடி தொழிலாளர் சங்கம் சார்பில் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றனர்.