Published : 18 Apr 2016 08:23 AM
Last Updated : 18 Apr 2016 08:23 AM

தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை: மதுரையில் வைகோ குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

மதுரை, தேனி மாவட்டங்களில் போட்டியிடும் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி - தமாகா வேட் பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக வைகோ நேற்று விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தல் ஆணையம் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழக தேர்தல் ஆணையராக உள்ள ராஜேஷ் லக்கானி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார்.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப் பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். எங்கள் கூட்டணித் தலைவர்களில் ஒருவர் தவறு செய்தால் மற்றவர் தட்டிக் கேட்பார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து பிரசாரத்தின்போது கூறி வருகிறோம். விஜயகாந்த் முதல்வர் ஆவதும், கூட்டணி ஆட்சி அமைவதும் உறுதி என்றார்.

இதைத் தொடர்ந்து தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் போடி, ஆண்டிபட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத் தில் வைகோ பேசியதாவது:

நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். அதனால் எனது தலையில் தலைப்பாகையாகக் கட்டியுள்ள இந்த பச்சை துண்டை தேர்தல் முடியும் வரை கழற்றக் கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளேன். இந்த நாட்டில் விவசாயிகள் தன்னம்பிக்கை இழந்து அடங்கிப்போய் விட்டனர்.

பெரியாறு அணையை காக்க அதிமுக, திமுக, காங்கிரஸ் என அனைத்துக் கட்சியினரையும் ஒன்று திரட்டி தேனி மாவட்டத்தில் போராட்டம் நடத்தியுள்ளேன். அப்போது 10 லட்சம் பேர் திரண்ட னர். பெரியாறு பிரச்சினையில் ஓட்டுக்காக நான் போராடவில்லை. மக்களுக்காகப் போராடினேன்.

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று தற்போது உங்களிடம் கேட்டு வந்துள்ளேன். நாங்கள் ஆட்சிக்கு வருவோம். ஆட்சியில் கூட்டணி மந்திரி சபை அமைக்கப்படும். கூட்டணி ஆட்சி என்பது குதிரைக்கு கடிவாளம் போடுவது போல். எந்த தவறும் நடக்காது.

முதல்வர், அமைச்சர், எம்எல்ஏ என யாருக்கு உடல்நிலை சரி யில்லையென்றாலும் தனியார் மருத்துவமனைக்கு செல்லக் கூடாது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண் டும். அந்த அளவுக்கு அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தி முறையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும்.

எந்தக் கட்சியும் சாராத இளைஞர்கள், இளம் பெண்கள் பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். பணம் கொடுப்பதை தடுக்காவிட்டால் தமிழ்நாட்டை இனி காப்பாற்ற முடியாது என் றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x