

வெள்ளத்தால் மாணவர்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் குடியேறியதால், அடையாற்றை சுற்றியிருக்கும் சென்னை மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மூடப்படும் அபாயத்தில் உள்ளன.
அடையாறைச் சுற்றியுள்ள திடீர் நகர், ஆத்மா நகர், மடுவங்கரை மற்றும் லிட்டில் மவுண்ட் ஆகிய இடங்களைச் சேர்ந்த மக்கள், வெள்ளத்தின் காரணமாக தங்கள் குழந்தைகளோடு, வேறு இடங்களுக்குக் குடி பெயர்ந்துள்ளனர். சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஆகியவை அடையாறைச் சுற்றியுள்ள வீடுகளை இடித்துவிட்டு, அவற்றுக்கான மாற்று வழிகளைத் தேட ஆரம்பித்துள்ளன.
ஏற்கனவே மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை, மற்ற பள்ளிகளோடி இணைக்கும் திட்டத்தோடு இருந்தது சென்னை மாநகராட்சி. மாநகராட்சி மன்றத்தில் மேயர் சைதை துரைசாமி, 25 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகள், அருகில் இருக்கு பள்ளிகளோடு இணைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
முன்னதாக 1999-ல் இருந்து 2011 வரை, 56 பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளின் இணைப்பு, கல்வித்தேவைக்காக மட்டுமே நடைபெறும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் சொன்னபடி நடக்கவில்லை. பெரும்பாலான பள்ளிக் கட்டிடங்கள் மூடியே கிடக்கின்றன. 2016-ல் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
2009-ல் மட்டும், சுமார் 30 பள்ளிகள், போதுமான நிதியுதவி இல்லாமலும், எதிர்ப்புகளாலும் மூடப்பட்டுவிட்டன. ஆனால் அதற்குப் பின்னர், முடிவுகள் வேறு விதமாயின. 122 ஆரம்பப்பள்ளிகள், 92 நடுநிலைப்பள்ளிகள், 38 உயர்நிலைப்பள்ளிகள் என மொத்தமாய் 284 பள்ளிகள் மாநகராட்சியால் நடத்தப்படுவதாகக் கூறப்படுகின்றன. ஆனால் அவற்றிலும் சில பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன.
அடையாறு, கூவம் ஆறு, பக்கிங்ஹாம் கால்வாயில் ஆகியவற்றை ஒட்டியுள்ள இடங்களில் இருக்கும் பள்ளிகள் மழையால் சேதமுடைந்துள்ளன. அவற்றில் சுமார் 23 பள்ளிகளை சென்னை மாநகராட்சி சரிப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது.
இங்கு சுமார் 2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் சேதமடைந்திருக்கின்றன. ஹரிநாராயணபுரம், எஸ்.என்.செட்டி தெரு, வால்டாக்ஸ் சாலை, அம்மையம்மாள் தெரு, கோயம்பேடு, நெசப்பாக்கம், ஜாஃபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், கார்ட்மேன் தெரு, மேட்டுப்பாளையம், சிஐடி நகர், திடீர் நகர், ஜோன்ஸ் சாலை, மடுவங்கரை மற்றும் தரமணி ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் மறுசீரமைப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.