Published : 26 Oct 2014 01:15 PM
Last Updated : 26 Oct 2014 01:15 PM

‘அம்மா’ வார சந்தை, ‘அம்மா’ திரையரங்கம்: அம்பத்தூர் மண்டலத்தில் அமைக்க முடிவு

சென்னை மாநகராட்சி சார்பில் அம்பத்தூர் மண்டலத்தில் முதலாவது அம்மா வாரச் சந்தை மற்றும் அம்மா திரையரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் சென்னையில் முதல்முறையாக மாநகராட்சி சார்பில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. அதன்பிறகு மற்ற மாநகராட்சி, நகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதையடுத்து, சென்னை முழுவதும் ‘அம்மா வாரச் சந்தை’, ‘அம்மா திரையரங்கம்’ அமைக்கப்படும் என்று இந்த ஆண்டு மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அம்மா வாரச் சந்தையில் உணவு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், மளிகை சாமான்கள் என அனைத்தும் கிடைக்கும் வகையில் அமைக்கப்படும் என்றும், ‘அம்மா திரையரங்கில்’ குறைந்த கட்டணத்தில் திரைப்படங்கள் திரையிடப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்திருந்தது. இதற்காக, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பின்னர், மண்டலத்துக்கு ஒரு வாரச் சந்தை மற்றும் திரையரங்கம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

முதல்கட்டமாக முகப்பேரில் இவற்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக நேற்று நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

அம்பத்தூர் மண்டலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 3.94 ஏக்கர் காலி இடம் உள்ளது. இதை மாநகராட்சிக்கு தருமாறு கேட்கப்பட்டுள்ளது. இந்த காலி இடத்தை சுற்றி பாடி குப்பம், பாடி புது நகர், முகப்பேர் கிழக்கு, முகப்பேர் மேற்கு, கோல்டன் ஜார்ஜ் நகர், அன்னை அடுக்ககம், கோல்டன் ஜூப்ளி அடுக்ககம், திருவல்லீஸ்வரர் நகர், இளங்கோ நகர் மற்றும் குமரன் நகர் ஆகிய குடியிருப்புகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.

எனவே, இந்த இடத்தில் அம்மா வாரச்சந்தை மற்றும் அம்மா திரையரங்கம் அமைத்தால் அப்பகுதி மக்களுக்கு உபயோகமாக இருக்கும். இந்த இடத்தை இலவசமாகவோ, பெயரளவில் குத்தகைக்கோ அல்லது சதுர அடிக்கு ரூ.1 என்ற வீதத்தில் வாடகைக்கோ அல்லது நில உரிமை மாற்றம் அடிப்படையிலோ தருமாறு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநரிடம் கோரப்படும்.

இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x