

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நேற்று தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:
தெலங்கானா மற்றும் வடக்கு கர்நாடக மாநிலங்களில் நீடித்து வந்த தென்மேற்கு பருவ மழை முடிவடைந்து விட்டது. தமிழகத்துக்கு அதிக மழை பொழிவை தரும் வடகிழக்கு பருவ மழை நேற்று தொடங்கி இருக்கிறது. டிசம்பர் வரை மழை நீடிக்கும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டிய கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சனிக்கிழமை காலை 8. 30 மணி வரையான 24 மணி தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் 18 செ.மீட்டரும் நுங்கம்பாக்கத்தில் 16 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம், புதுச்சேரி, நாகை மாவட்டம் சீர்காழி , கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, சென்னை கிண்டி ஆகிய இடங்களில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் மட்டும் நேற்று அதிகாலை 4 மணி முதல் 7.15 மணி வரை 11 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. கடந்த 2 நாட்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவ மழை தொடங்கி இருப்பதால் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் சராசரியாக 35.60 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக செம்பரம்பாக்கத்தில் 95 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக ஊத்துக்கோட்டையில் 9 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்தது. அதிகபட்சமாக தாம்பரத்தில் 100 மி.மீட்டர் மழை பதிவானது. கனமழை காரணமாக செங்கல்பட்டு அடுத்த பழவேலி பகுதியில் உள்ள மலைக்குன்றில் இருந்து சரிந்த பாறைகள், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்தன.
கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 127 மி.மீ. மழை பதிவானது. குறைந்தபட்சமாக தொழுதூரில் 9 மி.மீ. மழை பெய்தது. கடல் சீற்றம் காரணமாக கடலூர், பரங்கிப்பேட்டை மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்குள் செல்லவில்லை. நெய்வேலி, வடலூர், திட்டக்குடி, புவனகிரி, சிதம்பரம், பண்ருட்டி, அண்ணாகிராமம், புதுப்பேட்டை உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.