பாலாறு தடுப்பணையில் விழுந்து உயிர்நீத்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா உத்தரவு

பாலாறு தடுப்பணையில் விழுந்து உயிர்நீத்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா உத்தரவு
Updated on
2 min read

வாணியம்பாடி அருகே பாலாறு தடுப்பணையில் விழுந்து உயிர்நீத்த விவசாயி சீனிவாசன் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உற்பத்தியாகும் பாலாறு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வழியாக தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் நுழைந்து திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக 222 கி.மீ. பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

1892-ம் ஆண்டு ஏற்பட்ட மதராஸ் - மைசூர் ஒப்பந்தப்படி, பாலாறு பல மாநிலங்களில் பாயும் நதி என்பதால், தமிழகத்தின் அனுமதி இல்லாமல் அணைகள் கட்டவோ, நீரைத் தடுக்கவோ, தேக்கவோ, திருப்பவோ செய்யும் வகையில் எந்த கட்டுமானத்தையும் ஆந்திர அரசு மேற்கொள்ள முடியாது.

கடந்த 2006-ல் சித்தூர் மாவட்டம் குப்பம் தாலுகா கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்ட முயற்சித்தது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசு தொடர்ந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.

தற்போது பாலாற்றின் குறுக்கே சித்தூர் மாவட்டம் பெரும்பள்ளம் என்ற இடத்தில் ஆந்திரம் - தமிழ்நாடு எல்லைக்கு அருகே அமைந்துள்ள தடுப்பணையின் உயரத்தை 9 அடியிலிருந்து 12 அடியாக ஆந்திர அரசு உயர்த்தியுள்ளது. இதுபற்றி தெரிய வந்ததும் கடந்த 1-7-2016-ல் ஆந்திர முதல்வருக்கு கடிதம் எழுதினேன். அதில், ‘‘தடுப்பணையின் உயரத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர வேண்டும். இயற்கையாக தமிழகத்துக்கு வர வேண்டிய பாலாற்று நீரை எவ்வகையிலும் தடுக்கக் கூடாது’’ என கோரிக்கை விடுத்திருந்தேன்.

கடந்த 2 மாதங்களில் கங்கனஹள்ளி, சித்தாவூர், கங்குந்தி ஆகிய இடங்களில் உயர்த்தப்பட்ட தடுப்பணையின் உயரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இப்பிரச்சினையில் தலையிட்டு ஆந்திர அரசுக்கு அறிவுரைகள் வழங்குமாறு மத்திய அரசுக்கும் தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனாலும் ஆந்திர அரசும், மத்திய அரசும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கடந்த 17-ம் தேதி தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசின் அனுமதி பெறாமல் தடுப்பணையின் உயரத்தை அதிகப்படுத்தியது தமிழக மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என அறிவிக்க வேண்டும். பல இடங்களில் உயர்த்தப்பட்ட தடுப்பணையின் உயர்த்தை பழைய நிலைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்.

ஆந்திர அரசு இவ்வாறு செய்வதற்கு நிரந்தர தடையாணை பிறப்பிக்க வேண்டும். பாலாறு மற்றும் அதன் கிளை நதிகளில் இயற்கையாக ஓடும் நீர் தமிழகத்துக்கு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என ஆந்திர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த வழக்கில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாணியம்பாட்டி வட்டம் புல்லூர் கீழ்பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணு என்பரின் மகன் சீனிவாசன் கடந்த 29-ம் தேதி பெரும்பள்ளம் தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆந்திர அரசு தடுப்பணை கட்டியதால் தமிழகத்துக்கு வர வேண்டிய நீர் வராமல் போய் விட்டதே என வேதனைப்பட்டு, உணர்ச்சிவயப்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளார் என ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளது..

ஆனால், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் விசாரணையில் தடுப்பணையின் சுவர் மீது நின்று வேடிக்கை பார்க்கும்போது தவறி விழுந்து இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இறந்த சீனிவாசன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in