மாணவர்கள் கோஷ்டி மோதல் பொறியியல் கல்லூரி சூறை

மாணவர்கள் கோஷ்டி மோதல் பொறியியல் கல்லூரி சூறை
Updated on
1 min read

மாணவியை மாணவன் தாக்கியதால் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. கல்லூரி கதவு, ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பதற்றமான சூழ்நிலை உருவானதால் போலீஸார் வரவழைக்கப்பட்டு மோதல் கட்டுப்படுத்தப்பட்டது. தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாணவியை அடித்த மாணவர்

சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கங்கரணை பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கும் இறுதியாண்டு மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையிலான பிரச்சினையில் மாணவியை மாணவர் அடித்துள்ளார்.

அழுதுகொண்டே வகுப்புக்கு சென்ற மாணவி, சக மாணவர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த 3-ம் ஆண்டு மாணவர்கள், அந்த இறுதியாண்டு மாணவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதனால், இப்பிரச்சினை 3-ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் இடையே கோஷ்டி மோதலாக மாறியது. கல்லூரி நிர்வாகம் இரு தரப்பினரையும் அழைத்து பேசியது. சமரசமாக செல்வதாக கூறிவிட்டு இருதரப்பினரும் சென்றுள்ளனர்.

கதவை உடைத்து தாக்குதல்

இந்நிலையில், வியாழக்கிழமை காலை மாணவர்கள் வழக்கம்போல கல்லூரிக்கு வந்தனர். அப்போது இறுதியாண்டு மாணவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து 3-ம் ஆண்டு மாணவர்களை சரமாரியாக தாக்கினர். பதிலுக்கு அவர்களும் தாக்கினர். இரு தரப்பு மாணவர்கள் இடையே பயங்கர மோதல் வெடித்தது. தாக்குதலுக்கு பயந்து 3-ம் ஆண்டு மாணவர்கள் சிலர் வகுப்புகளை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தனர். கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த இறுதியாண்டு மாணவர்கள் அவர்களையும் சரமாரியாக தாக்கினர். ஜன்னல், கதவுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், கல்லூரி வளாகம் போர்க்களம்போல மாறியது. பதற்றமான சூழல் உருவானது.

போலீஸார் குவிப்பு

உடனடியாக பீர்க்கங்கரணை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து மாணவர்கள் மோதலை தடுத்து நிறுத்தினர். கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் உடனடியாக பேருந்துகளில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். விடுதி மாணவ, மாணவிகளும் உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பாதுகாப்புக்காக கல்லூரியில் போலீஸார் நிறுத்தப்பட்டனர்.

மோதலில் காயம் அடைந்த 3-ம் ஆண்டு மாணவர்கள் 4 பேர் தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in