Published : 29 Mar 2017 12:50 PM
Last Updated : 29 Mar 2017 12:50 PM

குடிமராமத்து என்ற பெயரில் ஏரிகளில் மண் கொள்ளை: ராமதாஸ் வேதனை

குடிமராமத்து என்ற பெயரில் ஏரிகளைத் தூர்வாரும் திட்டத்தில் சவுடு மண் கொள்ளை நடத்தப்படுவதாக பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''நல்ல நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் பணிகளில் ஊழலையும், கொள்ளையையும் புகுத்தி இயற்கை வளங்களை அழிப்பதில் தமிழக ஆட்சியாளர்களுக்கு ஈடு இணை யாருமில்லை. ஏரிகளைத் தூர்வாரும் திட்டத்தை அறிவித்து விட்டு, அதிலும் சவுடு மண் கொள்ளை நடத்துவதே இதற்கு உதாரணம்.

விவசாயத்துக்கு அடிப்படை ஆதாரமாக விளங்கும் நீர்நிலைகளைப் பராமரித்து பாதுகாப்பதில் தமிழக ஆட்சியாளர்களுக்கு சிறிதும் அக்கறை இல்லை. தமிழகத்திலுள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும், பாசனக் கால்வாய்களும் தூர்வாரப்பட்டு இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. அதனால் பாசன ஆதாரங்களின் கொள்ளளவு குறைந்து விட்ட நிலையில், நடப்புக் கோடைக்காலத்தைப் பயன்படுத்தி அவற்றை தூர்வார வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அதன்பயனாக, பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வந்த குடிமராமத்து முறைக்குப் புத்துயிரூட்டி பாசன ஆதாரங்களைப் பாதுகாக்கும் வகையில், நடப்பாண்டில் ரூ.100 கோடியில் 1,519 நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. கடந்த 13-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் ஏரியில் இப்பணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ஆனால், இத்திட்டம் செயல்படுத்தப்படும் 1500-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் குடிமராமத்து பணிக்கு பதிலாக சவுடு மண் கொள்ளைதான் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வழக்கமாக குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் போது தூர்வாரப்படும் மண்ணை அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.

நீர்நிலைகளில் இருந்து எடுக்கப்படும் சவுடு மண் வளமானது என்பதால் அதை வயலில் இடும் போது, வயல்களின் வளம் அதிகரிக்கும்; சவுடு மண் மீண்டும் ரியில் சரிந்து கொள்ளளவைக் குறைப்பது தடுக்கப்படும் என்ற இரட்டை நன்மைகளை கருதி தான் காலங்காலமாக இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இப்போது குடிமராமத்து பணிகள் நடைபெறும் ஏரிகளில் உள்ள சவுடு மண் உழவர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, செங்கல் ஆலை அதிபர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

குடிமராமத்துப் பணித் திட்டத்தின் மூலம் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஒரு மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே மண்ணை வெட்டி எடுக்க வேண்டும். அவ்வாறு வெட்டி எடுக்கப்பட்ட மண்ணை கரைகளை வலுப்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொண்ட பிறகு மீதமுள்ள மண்ணை மட்டுமே உழவர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால், குடிமராமத்து செய்யப்படும் நீர்நிலைகளில் செங்கல் சூளை உரிமையாளர்கள் அவர்களுக்கு சொந்தமான எந்திரங்களைக் கொண்டு வந்து 15 அடி முதல் 20 அடி ஆழத்திற்கு சவுடு மண்ணை வெட்டி எடுத்து சரக்குந்துகள் மூலம் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது.

ஒரு சரக்குந்து சவுடு மண்ணுக்கு ரூ.1500 வரை வசூலித்து ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் பங்கிட்டுக் கொள்கின்றனர். செங்கல் சூளையாளர்களே மண்ணை வெட்டி எடுத்துச் செல்வதால், அதையே தூர் வாரியதாக கணக்குக் காட்டி அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியும் ஆளுங்கட்சியினரால் சுருட்டப்படுகிறது.

தூர் வாருதல் என்ற பெயரால் பல அடி ஆழத்திற்கு மண் வெட்டி எடுக்கப்படுவதால், குடிமராமத்து பணியின் நோக்கமே சிதைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஒரே சீராக மண்ணை எடுக்காமல் ஆங்காங்கே திட்டுத்திட்டாக மண் வெட்டி எடுக்கப்படுவதால், நீரோட்டமும் பாதிக்கப்படுகிறது. பள்ளமாக வெட்டப்பட்ட பகுதிகளில் மட்டுமே தண்ணீர் தேங்கி நிற்கும் என்பதால், நீரை வெளியேற்றுவதற்கான மதகு பகுதிக்கு தண்ணீர் வராது.

அதிக ஆழத்திற்கு மண் வெட்டி எடுக்கப்படுவதால், ஏரி முழுவதும் நீர் சேர்ந்தாலும் கூட தண்ணீரை வெளியேற்றும் மதகின் மட்டத்திற்கு தண்ணீர் உயராது என்பதால் ஏரிகளின் நீரை பாசனத்திற்காக வெளியேற்ற முடியாத நிலை ஏற்படும். குடிமராமத்து என்ற பெயரில் நடக்கும் சவுடு மண் கொள்ளை குறித்து வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உழவர்கள் புகார்கள் கொடுத்தாலும் கூட, மண் கொள்ளையைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

குடிமராமத்து என்பது உண்மையாகவே வரவேற்கத்தக்க, பயனுள்ள திட்டமாகும். ஆனால், எந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினாலும் அதில் ஊழல் செய்யத் துடிக்கும் ஆளுங்கட்சி மற்றும் அதிகாரிகள் கூட்டணியால் இத்திட்டத்தின் பயன்கள் மறைந்து பாதகங்கள் மட்டுமே ஏற்படுகின்றன.

எனவே, இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு சவுடு மண் கொள்ளையைத் தடுக்கவும், நீர்நிலைகள் முறையாகத் தூர்வாரப்பட்டு பாசன ஆதாரங்கள் மேம்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x