

தமிழகத்தில் தற்போது பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்துக்கு திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களே காரணம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரம்ஜான் பண்டிகையை முன் னிட்டு வட சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இஸ்லாமிய மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் விழா எழும்பூர் இம்பீரியல் ஹோட்டலில் நேற்று நடந்தது. உதவிப் பொருட்களை வழங்கி ஸ்டாலின் பேசியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலும் 89 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக வந்துள்ளது. எதிர்க் கட்சிக்கு இந்த அளவுக்கு இடங் கள் கிடைத்திருப்பது இதுவே முதல்முறை. தேர்தலில் வென் றாலும் தோற்றாலும் இரண்டையும் ஒன்றாகக் கருதி மக்கள் பணி யாற்றும் கட்சி திமுக.
இந்த விழாவுக்கு ஏராளமான பெண்கள் வந்திருக்கின்றனர். பெண் உரிமைகளுக்காக பாடுபட்டவர் நபிகள் நாயகம். அதேபோல பெரியார், அண்ணா, காயிதே மில்லத் வழியில் திமுக தலைவர் கருணாநிதியும் பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார்.
கடந்த 1989-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் தருமபுரியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன. அதன் பிறகுதான் பெண்களின் வாழ்வில் பெரும் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, சொத்தில் சம உரிமை என திமுக ஆட்சியில் பெண்களின் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தமிழகத்தில் இன்றைய பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றம், முன்னேற்றத்துக்கு திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களே காரணம்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார். விழாவில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.