

சர்வதேச திருநங்கைகள் தினத்தையொட்டி தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மார்ச் 31-ம் தேதி சர்வதேச திருநங்கைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கப்படும் உரிமைகள் அனைத்தும் திருநங்கைகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.
2015-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு திருநங்கைகளை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது. இருப்பினும் இவர்களுக்கு உரிய உரிமைகள், சலுகைகள் - கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு துறைகளில் முழுமையாக கிடைக்கப்பெற வேண்டும்.
திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்தது. இவர்களுக்கு சட்டபூர்வமாக அங்கீகாரம் கிடைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
சர்வதேச திருநங்கைகள் தினமான இன்று தமாகா சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று வாசன் கூறியுள்ளார்.