

வைகை கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து கடந்த 2 நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இக்குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து சேடபட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் ஆண்டிபட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மழையில்லாததால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வைகை அணையில் இருந்து பழைய பத்து பாலம் வழியாக குள்ளப்புரம் செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகியது. இது குறித்து அப்பகுதி மக்கள் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 2 நாட்களாக சாலையில் தண்ணீர் விணாகச் செல்கிறது.
இந்த தண்ணீரில் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர், தங்களது வாகனங்களை நிறுத்தி கழுவியதோடு, குளித்துச் செல்கின்றனர். தண்ணீர் தட்டுப்பாட்டால் பலரும் சிரமப்பட்டு வரும் நிலையில், இருக்கும் தண்ணீரும் இப்படி வீணாகி வருவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “குழாய் உடைப்பு குறித்து தாமதமாகத்தான் எங்களுக்கு தகவல் வந்தது. குழாயை சீரமைப்பதற்கு நடவடிக்க மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.