Last Updated : 06 Feb, 2014 12:00 AM

 

Published : 06 Feb 2014 12:00 AM
Last Updated : 06 Feb 2014 12:00 AM

கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க தயாராகிறது அரசு- நீர் இருப்பு விவரம் தர மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் பருவமழை குறைவாக பெய்த 16 மாவட்டங்களில் ஏரி, குளங்களில் நீர் இருப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் பற்றிய தகவல்களைச் சேகரித்து அனுப்ப மாவட்ட ஆட்சியர் களுக்கு வருவாய்த் துறை உத்தரவிட்டுள்ளது.

20 சதவீதம் மழை குறைவு

தமிழகத்தில் இந்த ஆண்டில் வழக்கமாகப் பெய்வதைக் காட்டிலும் ஆண்டு சராசரி மழை அளவு 20 சதவீதம் குறைந்துள்ளது. (வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழைக் காலங்களைச் சேர்த்து) தமிழகத்தில் இரு பருவ மழைக் காலங்களையும் சேர்த்து ஒரு ஆண்டில் சராசரியாக 920 மி.மீ. மழை பெய்ய வேண்டும். இதில் 20 சதவீதம் வரை அதிகரிப்பது அல்லது குறைவதுகூட இயல்பான அளவாகவே கருதப்படுகிறது. இந்தத ஆண்டு 20 சதவீதம் குறைவாக, அதாவது 740 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. எனவே, இது இயல்பான நிலை என்று கூறப்படுகிறது.

ஆனால் திருப்பூர், திண்டுக்கல், அரியலூர், தூத்துக்குடி, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, கரூர், ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இந்த ஆண்டின் மழையளவு மாநில சராசரி அளவை விட 20 சதவீதம் குறைந்துள்ளது. இதில் சில மாவட்டங்களில் மழை மிகவும் குறைந்திருக்கிறது. உதாரணத்துக்கு, திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டு சராசரியைவிட 50 சதவீதம் குறைவாகவும், திண்டுக் கல் மாவட்டத்தில் 43 சதவீதம் குறைவாகவும் மழை பெய்துள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம்

இதனால், மேற்கண்ட மாவட்டங் களில் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அச்சம் தெரிவித்து தமிழக வருவாய்த் துறைக்கு (பேரிடர் மேலாண்மை) சில மாவட்ட ஆட்சியர்கள் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மழையளவு குறைவாக இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் தற்போதைய நீர் இருப்பு பற்றிய தகவல்களைச் சேகரித்து அனுப்பும்படி ஆட்சியர்களுக்கு வருவாய்த் துறை தகவல் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு உயரதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

மழை குறைவாக பெய்த மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்கள், ஆறுகளில் நீர் இருப்பு விவரம், நிலத்தடி நீர் மட்ட விவரம் ஆகியவற்றை சேகரித்து அனுப்புமாறு கூறியுள்ளோம். தற்போதுள்ள நீர் இருப்பு ஏப்ரல், மே வரை தாக்குப்பிடிக்காது. எனவே, கோடையில் குடிநீர் பிரச்சினையை சமாளிப்பதற்கான திட்டங்களை உடனடியாக தீட்டி செயல்படுத்தும் வகையில் ஆட்சியர்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

பல துறைகள் இணைந்து..

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகள் இயக்குநர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் உள்ளாட்சி ஆகிய துறை அலுவலகங்களுடன் இத்தகவல்களைப் பகிர்ந்து, ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை வருவாய் (பேரிடர் மேலாண்மை) துறை மேற்கொள்ளும்.

அந்தந்த மாவட்ட நிலைக்கேற்ப ஆழ்குழாய் கிணறுகளை அமைத்தல், நீர்வழித்தடங்களை அகலப்படுத்துதல், குழாய்களை சீரமைத்தல், கை பம்ப்களை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x