

கடந்த 7 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொழிலாசிரியர் பயிற்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையில் சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. செயலாளர் எஸ்.சாந்தகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-
கடந்த மே மாதம் நடத்தப்பட்ட ஓவியம், தையல், இசை, நெசவு உள்ளிட்ட அரசு தொழில்நுட்ப தேர்வுகளின் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்.
2007-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சியை (டிடிசி) மீண்டும் நடத்த வேண்டும். இதன்மூலம் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
கலைத்துறையை ஊக்குவிக்கும் வண்ணம் அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள கலை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேற்கண்ட தீர்மானங் கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.